Published : 28 Feb 2023 12:40 PM
Last Updated : 28 Feb 2023 12:40 PM
புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை இந்தியா அடைய தொழில்நுட்ப பயன்பாடு உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் இன்று(பிப். 28) பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''சிறிய தொழில்களை மேற்கொள்வதில் இருக்கும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க அரசு விரும்புகிறது. என்னென்ன செலவுகளை குறைக்க முடியும் என்பது தொடர்பான பட்டியலை அளிக்குமாறு தொழில்துறையை நாங்கள் கேட்டிருக்கிறோம். அனைத்து வகையான சிறு தொழில்களிலும் இருக்கும் தேவையற்ற செலவுகளை குறைக்க உள்ளோம்.
நாட்டின் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுவதை உறுதி செய்யும் நோக்கில், நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முகத்தைப் பார்க்காமல் வரி செலுத்துவதற்கான தொழில்நுட்பத்தை தற்போது நாம் பயன்படுத்துகிறோம். இதன்மூலம், வரி செலுத்துவோர் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. மருத்துவம், கல்வி, விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் இந்த தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. பொதுமக்கள் சந்திக்கும் 10 பிரச்சினைகளை நீங்கள் அடையாளம் காணுங்கள். அவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை சாத்தியப்படுத்தியது தொழில்நுட்பம்தான். ஜன்தன் எனும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம், ஆதார், மொபைல் எண் ஆகியவை ஏழைகளுக்கு நன்மைகளை வழங்கும் மும்மூர்த்திகளாக இருக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பம் சார்ந்தது. இணைய தொழில்நுட்பம், டிஜிட்டல் என்பதாக மட்டும் நாம் அவற்றை சுருக்கிவிட முடியாது'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT