Published : 28 Feb 2023 04:52 AM
Last Updated : 28 Feb 2023 04:52 AM
ஷில்லாங் / கோஹிமா: நாகாலாந்து, மேகாலயா மாநிலங் களில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் நாகாலாந்தில் 84.66%, மேகாலயாவில் 76.66% வாக்குகள் பதிவாகின.
திரிபுரா, நாகாலாந்து, மேகா லயா சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதன்படி திரிபுராவில் கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் நேற்று பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கெகாசி சுமி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் பாஜகவின் கினிமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதர 59 தொகுதிகளில் நேற்றுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுஷாங்க் சேகர் கூறும்போது, “நாகாலாந்தில் ஒட்டுமொத்தமாக 84.66 சதவீத வாக்குகள் பதிவாகின" என்று தெரிவித்தார்.
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் என்டிபிபி கட்சி40 தொகுதிகளிலும் பாஜக 19தொகுதிகளிலும் போட்டியிடு கின்றன. காங்கிரஸ் 23, நாகா மக்கள் முன்னணி 22, ஜன்சக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மேகாலயாவின் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கியஜனநாயக கட்சியின் வேட்பாளர் லிங்டாக் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதர 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தின. ஆனால் இந்த தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.பெரும்பாலான பகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி மேகாலயாவில் 76.66% வாக்குகள் பதிவாயின.
இடைத்தேர்தல்: மேற்குவங்கத்தின் சாகர்திகி தொகுதி, அருணாச்சல பிரதேசத் தின் லும்லா தொகுதி, ஜார்க்கண்டின் ராம்கர் தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை முன்னணி ஊடகங்கள் நேற்று இரவு வெளியிட்டன. திரிபுராவில் ஆளும் பாஜக 36 முதல் 45 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. ஜி நியூஸ் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன. நாகாலாந்தில் ஆளும் பாஜக-என்டிபிபி கூட்டணி 38 முதல் 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என்று இந்தியா டுடே தெரிவித்திருக்கிறது. டைம்ஸ் நவ், ஜி நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளன. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 18 முதல் 26 இடங்களைக் பிடிக்கும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ் உட்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று பெரும்பாலான ஊடகங்கள் கணித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT