Published : 27 Feb 2023 03:29 PM
Last Updated : 27 Feb 2023 03:29 PM
புதுடெல்லி: "நீட் தேர்வு குறித்த வழக்குகளின் எண்ணிக்கை, லட்சக்கணக்கான மாணவர்களின் விருப்பங்களை மட்டும் உணர்த்தவில்லை, மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதனையும் அது குறிக்கிறது" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை 19வது கங்கா ராம் சொற்பொழிவில் கலந்துகொண்டார். அதில், 'சுகாதாரத்தில் நியாயம் மற்றும் சமத்துவத்துக்கான வேட்கை' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: பெரும்பாலும், கொள்கை தளங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றாலும் மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை கேட்பது அரசின் கடமையாகும். அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் தலையிடுவது நீதிமன்றங்களின் கட்டமைக்கப்பட்ட கடமையாகும்.
நீட் தேர்வு தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு, விருப்பங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. இது இந்தியாவில் மருத்துவம் மிகவும் விரும்பக்கூடிய தொழிலாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இந்த வழக்குகள் இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.
நீதியின் குறிக்கோள் சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய இருதுறைகளுக்கும் வழிகாட்ட வேண்டும் இரண்டு துறைகளும் நேர்மை, சமத்துவம் மற்றும் தனிநபர், சமூக நலன்களின் அக்கறை கொண்டுள்ளது. சட்டத்தில் மக்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும். சுகாதாரத்தில் சேவை மற்றும் வளங்கள் மக்களுக்கு சமமாக வழங்கப்பட வேண்டும்.
சுகாதாரத்தைப் பெறுவதில் விளிம்புநிலை மக்கள் எப்போதும் பல தடங்கல்களை எதிர்கொள்கின்றனர். வகுப்பு, சாதி, பாலினம், மதம் போன்ற சுகாதாரத்தைச் சேராத புறக்காரணிகள் தனிமனிதனின் சுகாதார நிலையைத் தீர்மானிக்கின்றன.
காசநோய் பாதிப்பு விகிதம் ஏழைகளிடமும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களிடமும் அதிக அளவில் காணப்படுகின்றன. காசநோய் சிகிச்சையின் போது ஊட்டசத்து குறைபாடு இருந்தால், அவர்கள் மரணமடைவதற்கான வாய்ர்ரு 3 மடங்கு அதிகம். விளைவுகளில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வு சமூகத்தில் உள்ள கேடுகளை பிரதிபலிக்கிறது.
சுகாதாரத்துறையில் நீதியை நிலைநாட்ட, சமத்துவமும் நியாயமும் முதன்மையான காரணிகளாகும். சுகாதாரத்தில் நீதியை புரிந்து கொள்வதற்கான வழிகளில் ஒன்று, சுகாதாரத்தைப் பெறுவதில் பங்கு இருக்க வேண்டும். இதற்கான அர்த்தம், ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் நியாயமான, சமமான வாய்ப்புகள் உண்டு என்பதே.
சுகாதாரம் என்பது நீதியின் மற்றொரு கூறு, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான நோயாளின் நலன் மற்றும் அவரது உடல்குறித்த நெறிமுறை குறிக்கோள்களை உள்ளடக்கியதாகும். இறுதியான நோக்கம் என்பது, நியயாத்தை அடைவது, கவுரவத்தை ஊக்குவிப்பது, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையே மேற்கொள்வது மற்றும் சமூகத்திற்கு பங்களிப்பு செய்வதேயாகும்.
சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாகுபாடு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோபம், நோயாளி மருத்துவரை வெறும் சிகிச்சை அளிப்பாவராகவும், மருத்துவர் நோயாளியை, மருத்துவகுறைபாட்டை சரிசெய்ய வந்தவராகவும் மட்டும் பார்க்கும் போது மேலும் மோசமடைகிறது.
சுகாதாரத்துறையில் உள்ள இந்த பாகுபாடு குடிமக்களுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் வன்முறையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவத் தொழில் இன்று சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த வன்முறை நோயாளிக்கு மருத்துவச்சேவை வழங்குவதை தடுக்கிறது. இது நோயாளிக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒட்டுமொத்த மருத்துவ சேவையை உயர்த்துவதற்கும், பாதிக்கப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்கும் அரசின் கொள்கைகள் உறுதியாக உள்ளன. இந்திய மக்கள் தொகையில் உற்பத்தி திறனை ஊக்குவிக்க சுகாதார வல்லூநர்கள், சமூகத்தலைவர்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்து, சுகாதாரத்திற்கான அணுகலை அடைய சாத்தியமான தீர்வுகளை கண்டடையும் முன்முயற்சிகளில் ஈடுபட வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT