Published : 27 Feb 2023 01:01 PM
Last Updated : 27 Feb 2023 01:01 PM

மேகாலயாவில் 44.73%, நாகாலாந்தில் 57.5% | மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

மேகாலயாவின் ரி போய் மாவட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.

ஷில்லாங்/ கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி மேகாலயாவில் 44.73 சதவீதம், நாகாலாந்தில் 57.5சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல் ஐந்து வாக்காளர்களுக்கு நினைவுப் பரிசு: மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்துதொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57, திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. களத்தில் 4 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் மேகாலயா சட்டப்பேரவையின் முதல் பெண் எம்எல்ஏவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேகாலயாவில் மொத்தம் உள்ள 3,419 வாக்குப் பதிவு மையங்களில் 640 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேகாலயாவில் வாக்குச்சாவடிக்கு முதலில் வந்த ஐந்து வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வாக்காளர்கள் பெருமளவில் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றுவதை ஊக்குவிக்க இவ்வாறாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேகாலயாவில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். 81,000 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா பாஜக தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி மேற்கு ஷில்லாங்கில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேட்டியளித்த அவர், "எனது வாக்கும், மக்கள் வாக்கும் இத்தொகுதியில் எனக்கு வெற்றிகொடுத்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

நாகாலாந்தில் ஆட்சியை தக்கவைக்குமா பாஜக? நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதுபோல காங்கிரஸ் 23, நாகா மக்கள்முன்னணி 22, ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அங்கு 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நாகலாந்து துணை முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான யாந்துங்கோ பட்டோன் டியுயி தொகுதியில் வாக்களித்தார். அத்தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். வாக்களித்துவிட்டு பேசிய அவர் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x