Published : 27 Feb 2023 10:54 AM
Last Updated : 27 Feb 2023 10:54 AM

மேகாலயாவில் 12.06%, நாகாலாந்தில் 15.5% | காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

நாகலாந்தின் ஷமட்டோர் மாவட்டத்தில் வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள் | படம்: தேர்தல் ஆணையம் ட்விட்டர் பக்கம்

ஷில்லாங்/ கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நிலவரப்படி மேகாலயாவில் 12.06% வாக்குப்பதிவும், நாகாலாந்தில் 15.5% வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

நினைவுப் பரிசு: மேகாலயாவில் வாக்குச்சாவடிக்கு முதலில் வந்த ஐந்து வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வாக்காளர்கள் பெருமளவில் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றுவதை ஊக்குவிக்க இவ்வாறாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேகாலயாவில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். 81,000 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயாவில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு: மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்துதொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57, திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. களத்தில் 4 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் மேகாலயா சட்டப்பேரவையின் முதல் பெண் எம்எல்ஏவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேகாலயாவில் மொத்தம் உள்ள 3,419 வாக்குப் பதிவு மையங்களில் 640 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாகாலாந்தில் போட்டியின்றி வென்ற பாஜக வேட்பாளர்: நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதுபோல காங்கிரஸ் 23, நாகா மக்கள்முன்னணி 22, ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அங்கு 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்தில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், திரிபுராவில் கடந்த 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேற்கண்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு என அனைத்து தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x