Published : 06 Sep 2017 03:00 PM
Last Updated : 06 Sep 2017 03:00 PM

பசுப்பாதுகாவலர்களை சட்டத்தின் முன் நிறுத்த கண்காணிப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பசுப்பாதுகாவலர்கள் வன்முறை, கொலைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்காணிப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாவட்டவாரியாக போலீஸ் அதிகாரிகளை நியமித்து பசுப்பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அப்படி ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் வழிவகை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாஜக ஆளும் ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் குஜராத் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலை முழுதும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து டிஎஸ்பி மட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க முடிவெடுத்துள்ளன.

மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி மேற்கொண்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோரடங்கிய அமர்வு ‘சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் பசுப்பாதுகாவலர்களை சட்டத்தின் முன் நிறுத்த மாநில, மத்திய அரசுகள் உயர்மட்ட போலீஸ் குழுக்களை அமைக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

துஷார் காந்தி தன் மனுவில், பட்டப்பகலில் பசுப்பாதுகாவலர்கள் கொலைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர், மத்திய அரசும் மாநில அரசுகளும் எந்த விதப் பொறுப்புமின்றி அலட்சியமாக இது குறித்து இருந்து வருகின்றனர் என்றும் தன் வாதத்தை முன் வைத்தார்.

மேலும் தலித்துகள், முஸ்லிம்கள் இதில் பெரும்பாலும் வன்முறைக்கு இலக்காகி வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், துஷார் காந்தி சார்பாக முன் வைத்த வாதங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசுக்கு அரசியல் சட்டம் 256-ம் பிரிவின் கீழ் மாநில அரசுகளுக்கு இது குறித்து அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடும் பொறுப்பு உள்ளது என்றும் மத்திய அரசு கைகழுவிச் செல்வது கூடாது என்றும் ஜெய்சிங் வாதிட்டார்.

இந்த வாதங்களுக்கு மத்திய அரசு “கூட்டுறவு கூட்டாட்சிக் கொள்கையின்படி” இந்த வாதத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஜெய்சிங் கூறியபோது, “அகிம்சைதான் இந்த நாட்டின் அடிப்படை நம்பிக்கையாகும். வன்முறைக்கு மத்திய அரசு தன் முதுகைக் காட்டிக் கொண்டிருக்க முடியாது. பசுப்பாதுகாவலர்களுக்கு எதிராக மாநில அரசுகளுக்கு எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றார்.

தலைமை நீதிபதி மிஸ்ரா, “வன்முறைகளை நீங்கள் அடக்க வேண்டும்” என்று 4 வடமாநிலங்களின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

முந்தைய விசாரணையில் பசுப்பாதுகாவலர்கள் வன்முறையைத் தடுப்பது மாநில அரசுகள் கையில் உள்ளது, மத்திய அரசு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருந்தது. இதனையடுத்தே மத்திய அரசுக்குப் பொறுப்பு உள்ளது என்று தற்போது உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x