Published : 26 Feb 2023 04:59 AM
Last Updated : 26 Feb 2023 04:59 AM

மாணவர் தற்கொலை சம்பவங்கள் - தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை

ஹைதராபாத்: மும்பை ஐஐடி-யில் முதலாமாண்டு படித்த தர்ஷன் சோலங்கி என்ற குஜராத் மாணவர் கடந்த12-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். பட்டியலினத்தை சேர்ந்த இம்மாணவர் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்று பேசியதாவது: மும்பை ஐஐடி தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக சமீபத்தில் படித்தேன். கடந்த ஆண்டு ஒடிசாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பழங்குடியின மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை இது எனக்கு நினைவூட்டியது.

இந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களை எண்ணி மிகவும் கவலைப்படுகிறேன். மாணவர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற உயிரைத் துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நமது நிறுவனங்கள் எங்கே தவறு செய்கின்றன என்று நானும் யோசிக்கிறேன்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் வழக்கமாகி வருகின்றன. இவர்களின் எண்ணிக்கை வெறும்புள்ளிவிவரங்கள் அல்ல. அவை பலநூற்றாண்டு கால போராட்டத்தை சொல்கின்றன. இந்தப் பிரச்சினையை நாம் தீர்க்க விரும்பினால் பிரச்சினையை அங்கீகரிப்பதே அதற்கான முதல் படி என நான் நம்புகிறேன்.

மாணவர்களின் மன ஆரோக்கியம் போன்று வழக்கறிஞர்களின் மன ஆரோக்கியமும் முக்கியமானது. மாணவர்களிடையே கருணை உணர்வை கல்வி பாடத்திட்டம் ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களின் பிரச்சினையை கல்வி நிறுவனத் தலைவர்களும் உணர வேண்டும். கல்வி நிறுவனங்களில் கருணை இல்லாததே பாகுபாடுகளுக்கு காரணமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

எனவே கருணையை ஊக்குவிப்பதே கல்வி நிறுவனங்களின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x