Published : 25 Feb 2023 06:58 PM
Last Updated : 25 Feb 2023 06:58 PM

வழக்குகள் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பின் குறைபாடே காரணம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

உதய்ப்பூர்: நீதிமன்றங்களில் வழக்குகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள சுகாதியா பல்கலைக்கழகத்தில் இந்திய சட்ட ஆணையம் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ''இந்திய நீதிமன்றங்களில் 4.90 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த அளவுக்கு வழக்குகள் தேங்குவது எந்த ஒரு சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்லது அல்ல.

வழக்குகள் அதிக அளவில் தேங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீதிபதிகளின் நிலை மிக மோசமாக உள்ளது. ஒரு நீதிபதி ஒரு நாளைக்கு 50 - 60 வழக்குகளை கையாள்கிறார். நீதிபதிகள் பல்வேறு வழக்குகளை தீர்க்கிறார்கள். ஆனால், புதிய வழக்குகள் இரண்டு மடங்காக வருகின்றன. இவ்வளவு வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்க வேண்டும் என்ற கேள்வி பொதுமக்களுக்கு எழுவது இயல்பு. நீதிபதிகள் எந்த அளவு பணிச்சுமையுடன் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் இது நீதிபதிகளின் குற்றம் அல்ல; நீதித் துறை அமைப்பில் உள்ள குற்றம்.

இந்த பிரச்சினைக்கு உள்ள பல்வேறு தீர்வுகளில் மிகவும் முக்கியமானது நீதித் துறையை டிஜிட்டல் மயமாக்குவது. காகிதத் தாள் பயன்பாடு இல்லாத நீதித் துறையை உருவாக்குவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில், பாதி அளவுக்கு நாம் முன்னேறி இருக்கிறோம். உயர் நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்கள் ஆகியவை தொழில்நுட்ப ரீதியாக நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் வழக்குகளை நடத்துவதில் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நமது தற்போதைய வாழ்க்கை முறையே நமது இருத்தலுக்கு ஆபத்தானதாக மாறிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேறினாலும் பிற ஆபத்துக்கள் நம்மை சூழ்கின்றன. பூமியை பாதுகாப்பதற்கான நியாயமான பங்களிப்பை நாம் செய்தாக வேண்டும். காகிதமில்லா நீதித் துறை என்பதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நீதித் துறை என்பதும் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையே. பசுமை எரிக்தித் துறையில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது. உலகிற்கான சிறந்த கண்ணோட்டமாக பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணோட்டம் உள்ளது'' என்று கிரண் ரிஜிஜு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x