Published : 25 Feb 2023 02:39 PM
Last Updated : 25 Feb 2023 02:39 PM
ராய்ப்பூர்: நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் கைப்பற்றிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த 3 நாள் மாநாட்டில் சோனியா காந்தி இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ''காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இது ஒரு சவாலான காலம். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றி அவற்றை நாசமாக்கிவிட்டன. ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருந்து நாட்டின் பொருளாதாரத்தையும் அவை சீரழித்துவிட்டன.
நமது அரசியல் சாசனத்தின் மதிப்பை அவமதிக்கும் வகையில் பாஜக அரசின் செயல் உள்ளது. பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வெறுப்பு நெருப்பை கொழுந்துவிட்டு எரியச் செய்யும் நோக்கில் பாஜகவின் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பாஜகவை நாம் வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் செய்தியை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல; இது அனைத்து மதங்கள், அனைத்து சாதிகள், அனைத்து பாலினங்களின் குரலை பிரதிபலிக்கும் இயக்கம். நாட்டு மக்கள் அனைவரின் கனவுகளையும் காங்கிரஸ் கட்சி நனவாக்கும். இந்திய ஒற்றுமை யாத்திரை கட்சிக்கு மிகப் பெரிய திருப்புமுனை. அத்துடன் எனது இன்னிங்ஸ் முடிவடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT