Published : 25 Feb 2023 08:47 AM
Last Updated : 25 Feb 2023 08:47 AM

கர்நாடக சட்டப்பேரவையில் இறுதி உரை ஆற்றிய எடியூரப்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இறுதியாக உரை ஆற்றிய முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பிரதமர் மோடி பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, முதுமையின் காரணமாக கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ள அவர், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். கர்நாடகாவில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதியாக நேற்றுஅவர் அவையில் உரையாற்றினார்.

அப்போது எடியூரப்பா பேசியதாவது: நான் அரசியலில் இவ்வளவு உயரம் வளர்ந்ததற்கு ஆர்எஸ்எஸ் இயக்கமே காரணம். அங்குபெற்ற பயிற்சியே அரசியலில் நான் வெற்றி பெறுவதற்குகாரணமாக இருந்தது. முதுமையின் காரணமாக இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். அதே வேளையில் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். பாஜகவில் என்னை யாரும் புறக்கணிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார்.

தேர்தலில் என்னை தொடர்ச்சியாக வெற்றி பெறவைத்த ஷிகாரிப்புரா மக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். வருகிற 27-ம் தேதி 80-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறேன். எனது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். எனது கனவு திட்டமான ஷிமோகா விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

எனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை பாஜகவில் இருப்பேன். கடைசிவரை பாஜகவை வளர்க்கவும், அதனை ஆட்சிக்கு கொண்டு வரவும் நேர்மையாகப் பாடுபடுவேன். இந்த தேர்தலுக்காக கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு எடியூரப்பா உருக்கமாகப் பேசினார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''பாஜகதொண்டராக, எடியூரப்பாவின்இறுதி உரை மிகவும் உத்வேகம் அளிப்பதாக உணர்கிறேன். அவரது உரையில் பாஜகவின் நெறிமுறைகள் பிரதிபலிக்கிறது. இந்த உரை பாஜகவினருக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் ஊக்கமாக இருக்கும்''என கன்னடத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர்மோடியின் இந்த பாராட்டுக்கு எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x