Published : 24 Feb 2023 07:48 PM
Last Updated : 24 Feb 2023 07:48 PM

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமே முக்கிய காரணம்” - ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுமே ஆதாரமாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 61-வது பட்டமளிப்பு விழா இன்று (பிப். 24) நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ பதக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: ''கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. இது அத்தனை எளிதானது அல்ல. நாட்டின் மிக முக்கியமான சாதனை இது. நாடு இந்த சாதனையை நிகழ்த்தியதில் விவசாயத்தின் பங்கு மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயம் முதுகெலும்பாக இருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உயர்ந்திருப்பதற்கு விவசாயமும் விசாயம் சார்ந்த தொழில்களுமே முக்கிய காரணம். தற்போது இந்தியாவைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. முதலீடுகளை செய்வதற்கும் வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஏற்ற நாடாக இந்தியா இருக்கிறது. உறுதியான கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியதன் காரணமாகவே இத்தகைய சூழல் உருவாகி உள்ளது.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் 3-வது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். வரும் 2047-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதன் நூற்றாண்டுக்குள் நாடு நுழைய உள்ளதை கருத்தில் கொண்டு அதற்கான அடித்தளத்தை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டுவதன் மூலம் புதிய புரட்சியை உருவாக்க முடியும்'' என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x