Published : 24 Feb 2023 07:02 PM
Last Updated : 24 Feb 2023 07:02 PM
புதுடெல்லி: பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் அந்நாட்டுக்கு இந்தியா கோதுமையை அனுப்பலாம் என்று ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், ''உலகமே ஒரு குடும்பம் எனும் மகா வாக்கியம் பிறந்த மண் இந்தியா. உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் எண்ணம். நாம் நமது மகிழ்ச்சியை மட்டும் பார்ப்பவர்கள் அல்ல.
பிற நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க மனிதர் பேச மாட்டார். இதேபோலத்தான் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும். ஆனால், இந்திய மண்ணில் உள்ள எவரும் - அவர் இந்துவாக இருந்தாலும், சமணராக இருந்தாலும், பவுத்தராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும் - பிற நாட்டவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பேசாமல் இருக்கமாட்டார்.
பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை ரூ.250-க்கு விற்கப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் இந்தியா அந்நாட்டுக்கு 20-25 லட்சம் டன் கோதுமையை அனுப்பிவைக்கலாம். ஆனால், பாகிஸ்தான் நம்மிடம் கேட்காது.
70 ஆண்டுகளுக்கு முன் நம்மோடு இருந்தவர்கள்தான் அவர்கள். ஆனால் என்ன பயன்? மீண்டும் மீண்டும் அந்நாடு நம்மையே தாக்குகிறது. 1948, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த போராகட்டும், கார்கில் போராகட்டும்... இவை பாகிஸ்தானின் குணத்தைக் காட்டுகிறது'' என தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் மட்டுமல்லாது வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்ற பொருளாதாரமும் இல்லாததால் அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அந்நாட்டுக்கு ஈரானும், சீனாவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதன் விவரம் > பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ஈரான், சீனா உதவிக்கரம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT