Published : 24 Feb 2023 12:39 PM
Last Updated : 24 Feb 2023 12:39 PM
ராய்பூர்: சத்தீஸ்கரில் இன்று (பிப்.24) நடக்கும் காங்ரகிஸ் கட்சியின் வழிகாட்டு குழுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.
காந்தி குடும்பத்தினர், புதிதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே சுதந்திரமாக செயல்பட விரும்புவதாகவும், முடிவகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதை விரும்பவில்லை என்பதால் இந்தக் கூட்டத்தை காந்தி குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர். இருந்தபோதிலும் 2024ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வது குறித்து நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து ஏற்பட்ட தேர்தல் தோல்விகள் கட்சிக்கான பின்னடைவுகளால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து. சோனியா காந்தி விலகினார். இதனைத் தொடர்ந்து நடந்த கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் 80 வயதாகும் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் 22 வருடங்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில், 84 சதவீத வாக்குகள் பெற்று கார்கே, கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி குடும்பத்தைச் சேராத தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி தேர்தலின் போதே காந்தி குடும்பத்தின் விசுவாசியாக கார்கே சித்தரிக்கப்பட்டார். இந்த நிலையில் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பயணித்து இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி முடித்திருக்கிறார். இந்த யாத்திரை தற்போதைய கட்சியின் அடையாளமாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் படைத்தவர் கார்கே தான் என்பதை புரியவைப்பது அசாத்தியமான விஷயம். இதனால் தங்களின் வருகை கட்சிக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கிவிடக்கூடம் என்பதால் வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ராய்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் காங்கிரஸின் 85 வது வழிகாட்டு குழு கூட்டத் தொடராகும். கடந்த 2005ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் டெல்லிக்கு வெளியே நடக்கும் முதல் வழிகாட்டுகுழு கூட்டமும் ஆகும். மூன்று நாள் நடைபெறும் இந்க் கூட்டத்தொடரில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பது, பாஜகவுக்கு எதிராக மற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் 15,000 நிர்வாகிகள் வந்துள்ளனர்.
வழிகாட்டுகுழு கூட்டம் நிறைவடைந்ததும், மாலை 4 மணிக்கு அடுத்த குழு கூடி, 6 தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கூடும். பிப். 25,26 ஆம் தேதிகளில் இந்த தீர்மானங்கள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும். பின்னர் 26ம் தேதி மதியம் காங்கிரஸ் மல்லிகார்ஜூன கார்கேவின் இறுதி உரையுடன் கூட்டம் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து பேரணி ஒன்றும் நடைபெற இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT