Published : 24 Feb 2023 06:20 AM
Last Updated : 24 Feb 2023 06:20 AM
புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நாம் ஒவ்வொருவரின் கூட்டுப்பொறுப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக நிலையான வளர்ச்சி 22 வது உச்சிமாநாட்டின் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதுஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதனை உணர்ந்து, சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்தியா அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவே புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை கண்டறியும் பணியில் இந்தியா முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது.
நகர்ப்புற சவால்களுக்கு தீர்வுகாண தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வெபினார் மூலமாக பிரதமர் மோடி பேசியது:
பசுமை ஆற்றல்: தங்கச் சுரங்கத்திற்கு குறையாத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவின் ஆற்றல் மூலங்கள் உள்ளன. எனவே, இந்த துறையில் முதலீட்டாளர்கள் துணிந்து முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
பசுமை ஆற்றலில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். எனவே சர்வதேச முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள இதுவே சரியான தருணம். சூரிய ஒளி, காற்றாலை, உயிரிஎரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஏராளமான மூலங்கள் இந்தியாவில் உள்ளன. இவை, ஒரு தங்கச்சுரங்கத்துக்கு ஈடானவை.
உயிரி எரிபொருளில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது, முதலீட்டாளர்களிடம் நிறையவர்த்தக வாய்ப்புகளை கொண்டுசேர்க்கும். 10 சதவீத எத்தனால்கலப்பு இலக்கை 5 மாதங்களுக்குமுன்னதாகவே இந்தியா எட்டியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியான முறையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, இந்தியாவின் நன்மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.
ஆண்டுக்கு 5 மில்லியன் டன்பசுமை ஹைட்ரஜன் உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய ஹைட்ரஜன் திட்டத்துக்கு தனியார் துறையின் கீழ் ரூ.19,000 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய வாகனங்களை புழக்கத்திலிருந்து அகற்றுவதற்கு ரூ3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள 3 லட்சம் அரசு வாகனங்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி சேமிப்பு திறனை 125 ஜிகாவாட்ஸ் மணி நேரமாக அதிகரிக்கப்பட்ட வேண்டும். வரும் 2030-க்குள் 500ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெறுவதற்கான லட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT