Published : 23 Feb 2023 05:17 AM
Last Updated : 23 Feb 2023 05:17 AM
புதுடெல்லி: நீண்ட இழுபறிக்கு பிறகு நடந்த டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றனர். டெல்லி மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக வசமிருந்தது. இப்போது அதை ஆம் ஆத்மி கைப்பற்றியது.
இதையடுத்து, டெல்லி மாநகராட்சிக்கு 10 நியமன உறுப் பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார். இதனிடையே, மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் நியமன உறுப்பினர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இதற்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்ததால் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே, ஆம் ஆத்மியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய், மேயர் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நியமன உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை என உத்தரவிட்டது.
இதையடுத்து மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 250 மாநகராட்சி உறுப்பினர்கள், 7 மக்களவை உறுப்பினர்கள் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 14 எம்எல்ஏ-க்கள் என 274 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வெற்றிக்கு 138 வாக்குகள் தேவைப்பட்டது.
மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தன.
இதுகுறித்து ஷெல்லி ஓபராய் கூறும்போது, “இந்த அவையை சட்டப்படி நடத்துவேன். உறுப்பினர் களும் அவை சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன்” என்றார்.
துணை மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஆலே முகமது இக்பால் 147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் கமல் பக்ரி 116 வாக்குகள் பெற்றார். 2 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறும்போது, “மேயர் தேர்தலில் குண்டர்கள் தோல்வி அடைந்தனர். பொதுமக்கள் வெற்றி பெற்றனர். புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெல்லி ஓபராய்க்கு வாழ்த்துகள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT