Published : 22 Feb 2023 10:20 AM
Last Updated : 22 Feb 2023 10:20 AM

மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உள்துறை அனுமதி

புதுடெல்லி: சட்டத்துக்குப் புறம்பாக உளவு அமைப்பை உருவாக்கி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநருக்கு உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்புச் சட்டத்தில் விசாரிக்க சிபிஐ அமைப்புக்கு அனுமதி வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.

2015 வழக்கு: 2015ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தபோது துணை முதல்வர் மனிஷ் சிசோடியா டெல்லி ஊழல் தடுப்புத் துறையையும் வைத்திருந்தார். அப்போது அவரது அதிகார வரம்புக்கு உட்பட்டு ஓர் உளவு அமைப்பு தொடங்கப்பட்டது. கருத்துப் பிரிவு (FBU Feedback Unit) எஃப்பியு என்று பெயரிடப்பட்ட அந்தப் பிரிவு பல்வேறு அமைச்சகங்கள், எதிர்க்கட்சிகள், தனிநபர்களை உளவு பார்ப்பதாக புகார் எழுந்தது. மனிஷ் சிசோடியா முதல்வரும் தனது நண்பருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இந்த அமைப்பின் மூலம் பல்வேறு ரகசியத் தகவல்களைத் திரட்டிப் பகிர்ந்ததாகவும், அந்த அமைப்புக்கு ரகசிய நிதி என்ற பெயரில் நிதியை ஒதுக்கியதாகவும் புகார்கள் எழுந்தது. இவ்வாறான அமைப்பை உருவாக்குவது சட்ட விரோதமானது என்று சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் சிசோடியாவை ஊழல் தடுப்புச் சட்டத்தில் விசாரணை செய்ய சிபிஐ அனுமதி கோரியிருந்தது.

இது தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் சிபிஐ கடிதம் எழுதியிருந்தது. அதனை ஆளுநர் உள்துறை அமைச்சக பார்வைக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இனி சிபிஐ மனிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு வழக்கில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x