Published : 22 Feb 2023 05:36 AM
Last Updated : 22 Feb 2023 05:36 AM
பெங்களூரு: கர்நாடக அரசின் கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், சசிகலாவின் மீது ஊழல் புகாரை தெரிவித்தவருமான ரூபா ஐபிஎஸ் நேற்று முன் தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் ஒன்றை கிளப்பினார்.
அதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக உள்ள ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மைசூருஆட்சியராக இருந்தபோது அப்போது அமைச்சராக இருந்த சா.ரா.மகேஷ் (இப்போது மஜத எம்எல்ஏ)உடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார். தற்போது அவருடன் உணவகம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கிறார். இருவருக்கும் இடையே திடீரென சமரசம் ஏற்பட்டது எப்படி?'' என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பினார்.
மேலும், ரோஹினி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு, அதனை 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டினார். இதுதவிர, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட டி.கே.ரவி ஐஏஎஸ் தற்கொலை வழக்கிலும் ரோஹினி சிந்தூரிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ரூபா கர்நாடக தலைமை செயலரிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார்.
இதற்கு ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ், ''நான் யாருக்கும் எனது புகைப்படங்களை அனுப்பவில்லை. நான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படங்களை ரூபா பொதுவெளியில் தவறான நோக்கத்தோடு பகிர்ந்துள்ளார். நான் எந்தெந்த அதிகாரிகளுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பினேன் என பெயரை வெளியிட வேண்டும்'' எனக்கூறி, ரூபா மீது தலைமை செயலர் மற்றும் மைசூரு போலீஸில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ், கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் ரூபா ஐபிஎஸ் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் பொறுப்பு ஒதுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. இதேபோல ரூபாவின் கணவரும் நில அளவியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் மோனிஷ் மோத்கில் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT