Published : 21 Feb 2023 08:31 AM
Last Updated : 21 Feb 2023 08:31 AM

ஒடிசாவில் தொலைதூர கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு ‘ட்ரோன்’ மூலம் ஓய்வூதியம்

புவனேஸ்வரம்: ஒடிசாவின் நுவாபாடா மாவட்டம், பலேஸ்வர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூட்கபாடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹெட்டா ராம் சத்னாமி. உடல் ஊனமுற்ற இவர், மாநில அரசு ஓய்வூதியம் பெற்று வருகிறார். ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற பலேஸ்வர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அடர்ந்த காடு வழியாக சென்று வந்தார். இநிலையில் இம்மாதம் ஒரு ட்ரோன் உதவியுடன் அவரது வீட்டிலேயே அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சத்னாமி கூறும் போது, “இம்மாதம் ட்ரோன் மூலம் எனக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஓய்வூதியம் அனுப்பினார். அடர்ந்த காடு வழியாக 2 கி.மீட்டருக்கு மேல் சென்று வந்த எனக்கு இது மிகப்பெரிய நிம்மதியாக உள்ளது” என்றார். ஒவ்வொரு மாதமும் சத்னாமி படும் சிரமத்தை கண்டு ட்ரோன் வாங்கியதாக பலேஸ்வர் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜ் அகர்வால் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எங்கள் ஊராட்சியில் உள்ள பூட்கபாடா கிராமம் அடர்ந்த காட்டுக் குள் உள்ளது. சத்னாமியால் பிறப்பில் இருந்தே நடக்க முடி யாது. நான் அவரது பெயரை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்தேன். பிற நாடுகளில் ட்ரோன் எப்படியெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை பார்த்தேன். அதனால்தான் ட்ரோனுக்கு ஆர்டர் செய்து, பணத்தை அவர் வீட்டு வாசலில் டெலிவரி செய்தேன்”

நுவாபாடா வட்டார வளர்ச்சி அதிகாரி சுபாதர் பிரதான் கூறும் போது, “சேவைகளை வழங்க இதுபோன்ற சாதனங்களை வாங்குவதற்கு அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவரின் சொந்த முயற்சியால் இது சாத்தியமானது” என்றார்.

மருந்துகள், மளிகைப் பொருட்கள், உணவுகள் என பல்வேறு பொருட்களை விநியோகிக்க உலகம் முழுவதும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் இந்தியாவில் ட்ரோன் மூலம் பணம் விநியோகிக்கப்பட்டது ஒரு வகையான முதல் முயற்சியாகும்.

ஓய்வூதியத்தை பெற பலேஸ்வர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அடர்ந்த காடு வழியாக சென்று வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x