Published : 21 Feb 2023 05:17 AM
Last Updated : 21 Feb 2023 05:17 AM
புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக மாணவர் பேரவைக்காக ‘டெப்ளாஸ்’ என்ற பெயரில் ஓர் அலுவலகம் அதன் வளாகத்தில் உள்ளது. இதில், மாணவர்கள் தங்களுக்காக அவ்வப்போது திரைப்படங்கள், முக்கிய ஆவணப்படங்களை திரையிடுவது உண்டு.
‘ஜானே பி தோ யாரோ’ எனும் இந்தி படத்தை ‘110 பிளவர்ஸ்’ எனும் மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திரையிட்டனர். இதற்காக அங்கு சுவரில் இருந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட சுமார் 30 தலைவர்களின் படங்களை அவர்கள் கழற்றி கீழே வைத்தனர். அந்த இடத்தில் திரையை மாட்டி அதில் படம் ஓடத் தொடங்கியது. அப்போது ஜேஎன்யுவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் சுமார் 15 பேர் அங்கு வந்தனர். அன்றைய தினம் வீரசிவாஜியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்ட படமும் கீழே வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய அவர்கள் அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினர். இந்த திடீர் தாக்குதலில் தூத்துக்குடி ஆய்வு மாணவர் எஸ்.நாசருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. மற்றொரு தமிழக மாணவரும் காயமடைந்தார். கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
பிறகு அங்கிருந்த பெரியாரின் படத்தை அடையாளம் தெரியாத வகையில் சிதைத்ததுடன், சுவரில் பல்வேறு வாசகங்களை எழுதியுள்ளனர். சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர் நாசர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “கடந்த 2020 முதல் இதுபோல் பல தாக்குதல்களை ஏபிவிபி அமைப்பினர் நடத்தி விட்டனர். தற்போது தென்னிந்தியாவில் இருந்து கல்விக்கு இங்கு ஏன் வருகிறீர்கள் என்று கூறி தென் மாநில மாணவர்களை தாக்குவது அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வேட்டி கட்டிய கேரள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். துணை வேந்தராக தமிழர் வந்தும் எங்களுக்கு பாதுகாப்பில்லை. ஏபிவிபியினர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு சார்பில் தமிழ்துறைக்கு ரூ.5 கோடி நிதி அளித்தும் எங்களுக்கு இந்தநிலை என துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்டிடம் புகார் அளித்துள்ளோம்” என்றார்.
ஜேஎன்யு இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களுக்கு பெயர் போனது. தற்போது வலதுசாரி மாணவர்களும் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படுகிறது. இதனால் இருதரப்பு மோதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT