Published : 24 Jul 2014 08:18 AM
Last Updated : 24 Jul 2014 08:18 AM
தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை குறைக்கும் முன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விடுதலைக்கு தடை விதித்ததுடன் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
ஓர் அரசியல் சாசன அமைப்பு தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்திய பின், இன்னொரு அமைப்பு அந்த அதிகாரத்தை குறைக்க முடியுமா? மாநில அரசு தன்னிச்சையாக தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? அதற்கான நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமா? ஒரு வழக்கில் இரண்டு அதிகாரம் கொண்ட அரசு இருக்க முடியுமா? தண்டனை குறைக்கப்பட்டவர்கள் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின், விடுதலை கோர முடியுமா? அதற்கு மீண்டும் விடுதலை கோர முடியாத வகையில் தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கலாமா? போன்ற கேள்விகளை எழுப்பி அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ஜே.எஸ்.கேகர், சலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி, ஆர்.எப்.நரிமன் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘‘இந்த வழக்கில் பதிலளிக்கும்படி கேட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து மாநிலங்கள் மட்டுமே பதிலளித்துள்ளன. அரசியல் சாசன அமர்வு முன்பு பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அதனுடன் தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையைக் குறைக்கும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்தையும் கேட்பது அவசியமா? என்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை தொடர்ந்து நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT