Published : 20 Feb 2023 08:38 AM
Last Updated : 20 Feb 2023 08:38 AM

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்

புதுடெல்லி: நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்புக்குள் நுழைய நீட் தேர்வு கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தாக்கலான பல்வேறு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை தமிழக அரசு அளித்தது. ஆனால் அந்த நடவடிக்கைகளில் எந்த முடிவும் எட்டாத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.

எனவே, மீண்டும் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெற ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீதும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதேபோல் நீட் கட்டாயம் என்ற மருத்துவ கவுன்சில் விதியை எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது புதிய மனுவை (ஒரிஜினல் சூட்) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அதிலும் குறிப்பாக நீட் தேர்வு கட்டாயம் என்பது ஒரு அதிகார வரம்பு மீறலும், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரான ஒன்று. அரசியலமைப்புப் பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான சமத்துவத்துக்கும் எதிரானது. மேலும், நீட் தேர்வு கட்டாயம் என்று அமல்படுத்தியது தமிழக மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x