Published : 19 Feb 2023 08:10 PM
Last Updated : 19 Feb 2023 08:10 PM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் வரும் 24ம் தேதி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கே.சி. வேணுகோபால் பேசியதாவது: ''அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எங்கள் கட்சிக்கு இருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்திருந்தோம். அவர்களும் கலந்து கொண்டார்கள். நாடாளுமன்றத்திலும், அதானி விவகாரத்தை எழுப்புவதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்; அது நடந்துவிட்டால் பாஜகவால் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாது என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறி இருக்கிறார். எங்கள் திட்டமும் அதுதான். நிச்சயம் பாஜகவுக்கு பாடம் புகட்ட முயல்வோம்.
காங்கிரஸ் கட்சியின் முழு அமர்வு கூட்டம் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை சத்தீஸ்கரில் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த அமர்வில் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மூன்றாம் நாள் முடிவில் ராய்ப்பூரில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்'' என தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்(மக்கள் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ், ''எதிர்க்கட்சிகள் வலிமையாக இருக்க வேண்டுமானால்; காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க வேண்டும். பாஜக விவகாரத்தில் நாட்டில் எந்த பகுதியிலும் சமரசம் செய்து கொள்ளாத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். சில எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நாங்கள் கூட்டும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். அதேநேரத்தில், நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு சாதகமாக செயல்படுவார்கள். அவ்வாறு இல்லாமல், பாஜகவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்'' என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT