Published : 18 Feb 2023 02:26 PM
Last Updated : 18 Feb 2023 02:26 PM

"ஜார்ஜ் சோரஸ் ஓர் ஆபத்தான பணக்காரர்" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

சிட்னி: தொழிலதிபர், முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் குறித்து, "முழு உலகமும் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை தனது கருத்துக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று விரும்பும் முதியவர், பணக்காரர், கொள்கை பிடிவாதமுள்ள ஆபத்தானவர்" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: முதியவர், பணக்காரர், கொள்கை பிடிவாதமுள்ள ஜார்ஜ் சோரஸ் நியூயார்க் நகரில் அமர்ந்து கொண்டு உலகம் இன்னமும், தங்களின் கருத்துகள் படியே இயங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த மாதிரியானவர்கள் கதைகளைக் கட்டமைக்க செல்வத்தை பயன்படுத்துகின்றனர்.

இவரைப் போன்றவர்கள் எல்லாம், அவர்களுக்கு விருப்பமானவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அதனை நல்லது என்பார்கள், மாறாக தேர்தல் எதிர்மறையான முடிவினைத் தந்திருந்தால் அதனை ஜனநாயக குறைபாடு என்பர்.

எங்களுடைய சொந்த ஜனநாயகத்தை பார்க்கும்போது, இன்று எனக்கு வாக்குரிமை உண்டு. இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை.தேர்தல் முடிவுகள் தீர்க்கமானவை. தேர்தல் நடைமுறை கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. தேர்தல் முடிந்ததும், அதன் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாங்கள் இல்லை.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் இந்திய பிரதமர் மோடியை நான் ஜனநாயகவாதியாக பார்க்கவில்லை என்று ஜார்ஜ் சோரஸ் தெரிவித்திருக்கிறார். முன்பும் நாங்கள் லட்சக்கணக்கான முஸ்லீம்களின் குடியுரிமையைப் பறிக்கப்போவதாக குற்றம்சாட்டியிருந்தார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இது ஒரு அபத்தமான ஆலோசனை.

உலகமயமாக்கல் அதிகமான வாய்ப்புகளை வழங்கும் அதே நேரத்தில் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களையும், பணவரவையும் நிறுவனங்களுக்கான திட்டங்களையும் அனுமதிக்கின்றது. இவைகள் எல்லாம் திறந்த சமூகத்தின் வெளிப்படைத்தன்மை என்ற போலித்தனத்தின் கீழ் நடக்கின்றது. நீங்கள் இதுபோன்ற அச்சுறுத்தல்களை செய்யும் போது, லட்சக்கணக்கான மக்கள் குடியுரிமையை இழக்கலாம். இது சமூகத்தில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் ஏனென்றால், அவர்களில் சிலர் உங்களை நம்புகிறார்கள். நீங்கள் அந்த வகையான மனநோயை உண்டு பண்ணுகிறீக்கள். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக, ஜனநாயகம், கருத்துச் சுதந்திரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஓப்பன் சொசைட்டி என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், “மோடியும் அதானியும் மிக நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரது வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. தற்போது அதானி குழுமம் சீட்டுக் கட்டு சரிவதுபோல் சரிந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார். சர்வதேச முதலீட்டாளர்களின் கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தாக வேண்டும். அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் சோரஸின் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: சோரஸ் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக இந்தியாவின் ஜனநாயகத்தை தகர்க்க விரும்புகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை குறிவைத்து 1 பில்லியன் டாலர் நிதி உதவி அறிவித்துள்ளார். இந்திய அரசு அவரது விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து செல்ல வேண்டும் என்று சோரஸ் நினைக்கிறார். இந்தியாவில் தனக்கு சாதகமான நபர்களை ஆட்சியில் அமர வைக்கும் நோக்கில் அவர் செயல்படுகிறார். இங்கிலாந்து வங்கியை சரிவுக்கு தள்ளியதால், அவர் பொருளாதார போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இப்போது அவர் இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறார். இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கும் இந்தத் தருணத்தில் அவர் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். இது இந்தியா மீதான போர்.

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சி செய்யும் அந்நிய சக்திகளை இந்தியர்கள் ஒன்றிணைந்து தோற்கடிப்பார்கள். ஜார்ஜ் சோரஸ் போன்று இந்தியாவை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எதிர்கொள்வோம். இவ்வாறு ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x