Published : 18 Feb 2023 12:49 PM
Last Updated : 18 Feb 2023 12:49 PM
குவாலியர்: ‘சீட்டா’ திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 சிவிங்கிப்புலிகள் சனிக்கிழமை மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானநிலையத்தை வந்தடைந்தன.
இந்த சிவிங்கிப்புலிகள் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-17 க்ளோப்மாஸ்டர் சரக்கு விமானம் மூலம் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்டன. முன்னதாக இதுகுறித்து சீட்டா திட்டத்தின் தலைவர் எஸ்.பி., யாதவ் கூறுகையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் விமானநிலையத்திலிருந்து, உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில் 12 சிறுத்தைகள் கிளம்பியுள்ளன. அவை சனிக்கிழமை காலை 10 மணிக்கு மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் விமானநிலையத்திற்கு வந்தடையும் என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி,12 சிவிங்கிப்புலிகளை ஏற்றிக்கொண்டு வந்த இந்திய விமானம் இன்று (சனிக்கிழமை) 10 மணிக்கு குவாலியர் விமானநிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து சிறுத்தைகள் ஹெலிகாப்டர் மூலம் மத்தியப்பிரதேசத்தின் குனோ பூங்காவில் விடப்படுகின்றன. 7 ஆண்கள், 5 பெண்கள் என 12 சிவிங்கிப்புலிகளையும் அதன் புதிய வீட்டில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஆகியோர் திறந்து விடுகின்றனர்.
இதுகுறித்து மத்தியப்பிரதேச முதல்வர் கூறுகையில்," குனோ பூங்காவில் இன்று சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை கூட இருக்கின்றது. இதற்காக பிரதமர் மோடிக்கு நான் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது அவரது தொலைநோக்கு பார்வை. குனோ பூங்காவில் இன்று விடப்படும் 12 சிவிங்கிப்புலிகளுடன் சேர்த்து அங்குள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர உள்ளது" என்றார்.
முன்னதாக, இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மறுஅறிமுகம் செய்யும் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தனது 72 வது பிறந்தநாளான கடந்த ஆண்டு செப்.17-ம் தேதி 8 சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் மறுஅறிமுகம் செய்து வைத்தார்.
இதற்காக, 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது.
இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகம் செய்வது தொடர்பாக, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும், ஆப்பிரிகாவும் ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. இந்தியாவில் சிவிங்கிப்புலிகளை மறுஅறிமுகம் செய்யும் செயல் திட்டத்தின் படி, இந்தியாவில் புதிய சிவிங்கிப்புலிகள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 12 -14 சிவிங்கிப்புலிகள் தென்னாப்பிரிக்கா, நமீபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும். அதன்பின்னர் தேவைக்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.
உலகிலுள்ள 7,000 சிவிங்கிப்புலிகளில் பெரும்பாலனவை தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானவில் வசிக்கின்றன. நமீபியா உலகில் அதிக அளவிலான சிவிங்கிப்புலிகள் வாழும் நாடாகும்.
இந்தியாவில், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக முற்றிலும் அழிந்து போன ஒரு பெரிய வேட்டை விலங்கு சிவிங்கிப்புலி மட்டுமே. சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டத்திலுள்ள சால் காட்டில் இருந்த கடைசி சிவிங்கிப்புலி கடந்த 1948 ஆம் ஆண்டு இறந்து போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT