Published : 18 Feb 2023 04:59 AM
Last Updated : 18 Feb 2023 04:59 AM

டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர் வாக்களிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இந்நிலையில் மேயர் தேர்தலுக்கு முன் 10 நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார். இதன் மூலம் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதனால் மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த 2 மாதங்களில் மேயர் தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், “மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மேயர் தேர்தலுக்கு பிறகு அவரது தலைமையிலான கூட்டத்தில் துணை மேயர் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.

இதன்மூலம் மேயர் தேர்தல் விவகாரத்தில் ஆம் ஆத்மி – பாஜக இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x