Published : 17 Feb 2023 08:57 PM
Last Updated : 17 Feb 2023 08:57 PM
புதுடெல்லி: பஞ்சாப்பின் காலிஸ்தான் புலிப்படை (காலிஸ்தான் டைகர் போஃர்ஸ்) மற்றும் ஜம்மு-காஷ்மீர் கஸ்னாவி ஃபோர்ஸ் (ஜேகேஜிஎஃப்) ஆகிய இரண்டு அமைப்புகளை பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: பஞ்சாபில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் புலிப்படை (காலிஸ்தான் டைகர் போஃர்ஸ்) பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு இன்று அறிவித்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல்படி, உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, இந்திய இறையாண்மை ஆகியவற்றுக்கு சவால் விடுப்பதாகவும், பஞ்சாபில் கொலை சம்பவங்களுக்கு இலக்குவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜம்மு-காஷ்மீர் கஸ்னாவி ஃபோர்ஸ் (ஜேகேஜிஎஃப்) அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊடுருவல் முயற்சிகளிலும், போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலிலும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்ஷ்-ஈ-முகமது, தெஹ்ரிக் உல் முஜாஹிதின், ஹர்கத்-உல்-ஜிகாத்-இ இஸ்லாமி உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளிலிருந்த தீவிரவாதிகளை இது பயன்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தற்போது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் முதலாவது அட்டவணையில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது.
ஹர்விந்தர் சிங் சாந்து என்கிற ரிண்டா என்பவர் பயங்கரவாதியாக இன்று அறிவிக்கப்பட்டார். இவருக்கு சர்வதேச பப்பர் கல்ஸா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் குறிப்பாக பஞ்சாபில் இவர் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் நான்காவது அட்டவணையில் உள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT