Published : 17 Feb 2023 02:15 PM
Last Updated : 17 Feb 2023 02:15 PM

அந்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருக்கவே கூடாது - பிரிட்டன் எம்.பி. கருத்து

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் ப்ளாக்மேன்

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம், ஒரு பிரச்சார வீடியோ, மலினமான இதழியல், அது ஒரு போதும் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் ப்ளாக்மேன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆவணப்படம் முக்கியமான விஷயங்களைப் பார்க்கத் தவறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப் ப்ளாக்மேன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் ஆகியவை பற்றி பேசியிருந்தார். அந்த பேட்டியில் பாப் ப்ளாக்மேன் கூறியதாவது: இங்கிலாந்து அரசுக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு மற்றும் பல விஷயங்களுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளது. அவைகள் இருநாட்டுக்கும் இடையில் உள்ள நல்லுறவை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.

கடந்த காலங்களைப்போல இருநாடுகளுக்கு முன்னாள் இருக்கும் எதிர்காலத்திலும் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நன்மை பயக்கும் சுதந்திரமான வர்த்தக வளர்ச்சி குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதனால், இவைகளைச் சீர்குலைக்கச்செய்யும் எதுவும் வருத்தம் தரக்கூடியதே.

இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு குறிப்பிடத்தகுந்த வேலையைச் செய்துள்ளது. தற்போது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா முன்னணி பொருளாதார சக்தியாகும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நினைத்தால் அரசை மாற்றக்கூடிய உலகின் மிகப்பெரிய உள்ள இந்திய ஜனநாயகத்தை நாமும் கொண்டாட வேண்டும்.

இந்தப் பின்னணியில் இருநாடுகளின் நட்புறவை வளர்த்தொடுப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஜி20 நாடுகளுக்கு இந்தாண்டு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், இந்தியாவுடனான உறவை நங்கள் வளர்த்து வருகிறோம் என்றார்.

மேலும் பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் குறித்தும் ப்ளாக்மேன் கருத்துதெரிவித்தார். அதுகுறித்து பேசிய பாப் ப்ளாக்மேன்," அந்த ஆவணப்படம் பெரும்பாலும் பிரச்சாரப்படம் போலவே இருந்தது. அந்த இரண்டு பாகம் கொண்ட ஆவணப்படம், மலினமான இதழியல் பாணியில், நரேந்திர மோடியை தாக்கியிருக்கிறது. அவர் குஜராத்தின் முதல்வராக இருந்த காலமும், அவர் பிரதமராக இருக்கும் காலமும் முழுவதுமாக புனைவுகள் நிறைந்ததாக இருந்தது.

அந்த ஆவணப்படம் பிபிசியால் ஒளிபரப்பப்பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் உலக அளவில் பிபிசிக்கென்று ஒரு அங்கீகாரம் இருக்கிறது. மக்கள் கடவுளே அது உண்மையாக இருக்கக்கூடாதா என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த ஆவணப்படம் ஒரு வெளிப்புற அமைப்பால் தயாரிக்கப்பட்டு பிபிசியால் மேற்பார்வையிடப்பட்டது. அந்த ஆவணப்படம் உண்மையைக் கூறவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குஜராத் கலவரம் குறித்த உண்மைகளை அந்த ஆவணப்படம் பார்க்கத்தவறி விட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தீர விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறியிருந்தது. இந்த உண்மையை ஆவணப்படம் பார்க்க தவறி விட்டது'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனைக் குறித்து பேசிய ப்ளாக் மேன்," பிபிசி ஏதாவது விதிமீறல் ஈடுபட்டுள்ளதா என்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். இந்தியாவிற்குள் இயங்கும் நிலையில், விதிகளுக்கு உட்பட்டுதான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவது அவர்களின் கடமையாகும். விரைவில் இது சரியாகும் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.

பாப் பிளாக், கடந்த 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு கிழக்கு ஹாரோவ்-ன் கர்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு க்ரேட்டர் லண்டன் அசம்ப்ளியின் தொழிலாளர் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறிய பின்னர் நான்கு ஆண்டுகள் ப்ரெண்ட் மற்றும் ஹாரோவ்-ன் க்ரேட்டர் அசம்ப்ளியின் உறுப்பினராக இருந்தார்.

ப்ளாக்மேன், 2010ம் ஆண்டு கிழக்கு ஹாரோவ்-ன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்பு, 1990 - 2010ம் ஆண்டுவரை ப்ரெண்ட் -ன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். அதற்கு முன்பாக, 24 வருடங்கள் ப்ரெண்டில் உள்ள ப்ரீஸ்டன் வார்ட்-ன் கவுன்சிலராக இருந்திருக்கிறார் என்று அவரது இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x