Published : 17 Feb 2023 09:08 AM
Last Updated : 17 Feb 2023 09:08 AM
புதுடெல்லி: மத்திய ஜல் சக்தி துறை மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில்ஜல் ஜன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி நாடு முழுவதும் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் சுமார் 10,000 நிகழ்ச்சிகளை நடத்தி 10 கோடி மக்களிடையே மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில்உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பின் தலைமையகத்தில் ஜல் ஜன் அபியான் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:
உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் நமது நாட்டின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு விடை காணும் வகையில் ஜல் ஜன் அபியான் திட்டம் என்ற மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தை பிரம்ம குமாரிகள் அமைப்பினர் முன்னெடுத்துச் செல்வார்கள்.
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண நாடு முழுவதும் நீர்நிலைகளைப் பாதுகாக்கவேண்டும். மழைநீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும். இந்தியாவில் தண்ணீரை கடவுளாகவும் நதிகளை தாயாகவும் மதித்து போற்றி வருகிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்வை இந்தியா புதுப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு செயல்படுத்தும் தூய்மை கங்கை திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முன்னுதாரணமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கங்கை நதி தூய்மையாகி வருகிறது. இயற்கை வேளாண்மை அதிகரித்து வருகிறது. இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
மத்திய அரசின் மழைநீரை சேமிப்போம் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 75 நீர்நிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மழைநீர் சேமிக்கப்படும். ஜல் ஜன்அபியான் திட்டத்தின் மூலம் வளமான, செழிப்பான இந்தியா உருவாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
விளையாட்டு திட்டம்
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கடந்த 2010-ம்ஆண்டில் ‘கேல் மகா கும்பமேளா' என்ற விளையாட்டு திட்டத்தை தொடங்கினார். இதன்படி பல்வேறு நகரங்கள், கிராமங்களில் விளையாட்டு விழா நடத்தப்பட்டு திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் ‘கேல் மகா கும்பமேளா' என்ற பிரம்மாண்ட விளையாட்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்றுகாணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:
கோரக்பூர் விளையாட்டு விழாவில் மல்யுத்தம், கபடி, ஹாக்கி உட்பட பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன. அதோடு ஓவியம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட கலை தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
சர்வதேச விளையாட்டு துறையில் இந்தியா முன்னிலை பெற வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்பயனாக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
உள்ளூர் அளவில் திறமையான வீரர்களை அடையாளம் காண உத்தர பிரதேச அரசு அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு விழாக்களை நடத்தி வருகிறது. கோரக்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் புதிதாக 100 விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாஜக எம்.பி.க்கள் நாடு முழுவதும் இதேபோன்ற விளையாட்டு விழாக்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வேற்றுமையில் ஒற்றுமையே தாரக மந்திரம்
பழங்குடி மக்களின் விளைபொருட்கள், கைவினை பொருட்களை விற்பனை செய்வதற்காக டெல்லியில் நேற்று பிரம்மாண்ட விற்பனை திருவிழா தொடங்கியது. இதில் தமிழகம் உட்பட 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனை திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம். இந்த திருவிழாவில் அதனை கண்கூடாக பார்க்கிறேன். கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களையும் சென்றடைந்து உள்ளது. குறிப்பாக தொலைதூர பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களை சென்றடைந்திருக்கிறது.
பழங்குடி பகுதிகளில் இதுவரை 400 ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். அப்போது 30 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவார்கள். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி பழங்குடி மாணவர்கள் இனிமேல் தாய் மொழியிலேயே உயர் கல்வியைப் பெற முடியும். பழங்குடி கிராமங்களில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறது. தொலைத்தொடர்பு வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பழங்குடி தலைவர்களின் பங்களிப்பு மறைக்கப்பட்டது. அந்த தவறை நீக்கி, பிர்சா முண்டா உள்ளிட்ட பழங்குடி சுதந்திரப் போராட்ட தலைவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT