Last Updated : 17 Feb, 2023 05:49 AM

 

Published : 17 Feb 2023 05:49 AM
Last Updated : 17 Feb 2023 05:49 AM

உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூருவுக்கு 2-ம் இடம் - ஜியோலொகேஷன் ஆய்வில் தகவல்

பெங்களூரு: உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் ஜியோலொகேஷன் தொழில்நுட்ப அமைப்பு 56 நாடுகளில் உள்ள 389 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது. ‘டாம்டாம் போக்குவரத்து நெரிசல் பட்டியல் என அழைக்கப்படும், அந்த ஆய்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது.

அதில் உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு பிடித்துள்ளது.

பெங்களூருவில் ‘பீக் ஹவர்' எனப்படும் அலுவலக நேரத்தில் 10 கிமீ தூரம் பயணிக்க 28 நிமிடங்களும் 9 விநாடிகளும் செலவாவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அலுவலக நேரத்தில் சுமார் 10 கிமீ பயணிப்பவர்கள் மட்டும் ஓர் ஆண்டுக்குச் செலவிடும் நேரம் சுமார் 129 மணி நேரம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதேபோல பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தநேரத்தில் பெட்ரோல் பயன்படுத்தும் கார்களில் இருந்து மட்டும் சுமார் 974 கிலோ கார்பன் மாசுவெளியேற்றப்படுகிறது. 2022–ம்ஆண்டில் அதிக கார்பன் மாசுவைவெளியிட்ட நகரங்களில் 5–ம்இடத்தை பெங்களூரு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தை பிடித்துள்ள லண்டனில் அலுவலக நேரத்தில் 10 கிமீ தூரம் பயணிக்க 35 நிமிடங்கள் ஆகின்றன. 3–வது இடத்தில்உள்ள அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் நகரமும், 4–வது இடத்தில் ஜப்பான் நாட்டின் ஸேப்போரோ நகரமும், இத்தாலியின் மிலன் 5–வது இடத்திலும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையான சாலை இணைப்பு இல்லாத காரணத்தாலே இந்த நகரங்களில் மிகப்பெரிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x