Published : 16 Feb 2023 10:14 AM
Last Updated : 16 Feb 2023 10:14 AM
அகர்தலா: திரிபுராவில் இன்று (பிப்.16) காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி அங்கு 69.60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் பிப்ரவரி16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி திரிபுராவில் இன்று (பிப்.16) காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. ஆனால் 40 முதல் 45 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறு சிறு கோளாறு ஏற்பட்டு பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக காலை 11 மணி நிலவரப்படி அங்கு 32.06% வாக்குகளும், காலை 9 மணியளவில் 13.69 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.
காலை7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே முதல்வர் மாணிக் சாஹா அகர்தலாவில் உள்ள போரோடோவாலி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்கள் அதிகளவில் வாக்களிப்பதைப் பார்க்கும்போது வெற்றி வாய்ப்பு உறுதியாகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்" என்றார்.
#WATCH | Tripura CM Dr Manik Saha casts vote in Assembly elections, in Agartala pic.twitter.com/fHpvoCpe4r
— ANI (@ANI) February 16, 2023
தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் அதிக அளவில் வந்து வாக்குகளை செலுத்தி ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "வளர்ச்சியை நோக்கி செயல்படும் அரசு அமைவதை உறுதி செய்யும் வகையில் மக்கள் தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆட்சியைத் தக்கவைக்குமா பாஜக? ஒட்டுமொத்தமாக திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 20 பேர் பெண்கள் ஆவர். மொத்தம் 28.12 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 3,328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 28 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் 1,100 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திரிபுராவில் தற்போது மாணிக் சாஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் பாஜக 55 தொகுதிகளிலும் அதன்கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு போட்டியாக கூட்டணி கட்சியான ஐபிஎப்டியும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது.
ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 46 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் சுயேச்சைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT