Published : 16 Feb 2023 09:37 AM
Last Updated : 16 Feb 2023 09:37 AM
பெங்களூரு: எல்லையில் ட்ரோன் ஊடுருவலை தடுக்க, ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது விரைவில் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் ஆக பணியாற்றும் சதானந்த் சவுகான் உருவாக்கிய ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கணினி பொறியாளரான சதானந்த் சவுகான், ரேடியோ அலைவரிசை அடிப்படையில் இதனை உருவாக்கியுள்ளார். இது எல்லையில் சில இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் குறித்து சதானந்த் சவுகான் கூறும்போது, “இந்த சாதனம் அதன் செயல்பாட்டு நோக்கங்களை அடைந்துள்ளது. துருப்புக்களிடம் இருந்து நேர்மறையான கருத்துகள் வந்துள்ளன. எதிரிகளின் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை எதிர்கொள்வதற்கான தொலைவை நாங்கள் அதிகரிக்க முயன்று வருகிறோம். படைகளின் தேவைக்கு ஏற்ப இதில் சில மாற்றங்களை செய்வோம்” என்றார்.
சதானந்த் சவுகான் தனது புதிய ட்ரோன் எதிர்ப்பு சாதனம் குறித்து, ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வந்த ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜுவுக்கு விளக்கம் அளித்தார்.
வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வாகன அடிப்படையிலான ட்ரோன் ஜாமர்களை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இவற்றை சப்ளை செய்ய விரும்புவோர் அதற்கான கோரிக்கைகளை முன்வைக்குமாறு கடந்த மாதம் கேட்டுக்கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் தென்மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் எல்லைக்கு அப்பாலிருந்து ட்ரோன்களை இந்த ராணுவம் கண்டறிந்துள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ட்ரோனுக்கும் அதை இயக்குவோருக்கும் இடையிலான ரேடியோ அலைவரிசை இணைப்பில் குறுக்கீடு செய்து ட்ரோனை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT