Published : 16 Feb 2023 09:19 AM
Last Updated : 16 Feb 2023 09:19 AM
திருவனந்தபுரம்: இத்தாலியைச் சேர்ந்த பெண் மரினா மதியோலி. இவர் கடந்த 1978 முதல் 1988-ம் ஆண்டு வரைதனது இளம் வயதில் வட இந்தியாவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார். பின்னர் இத்தாலி திரும்பி மவுரோ சரேன்ரியா என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு கிளாட், விஷ்ணுபாத் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், 18 ஆண்டுக்கு முன்பு இவர் தனது கணவர் மவுரோவுடன் கேரளாவில் குடியேறினார். இவர்கள் கோவளத்தில் ‘பரதேஷ் இன்’ என்ற தங்கும் விடுதியை தொடங்கி நடத்தி வந்தனர்.
இங்கு வரும் வட இந்திய வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள இந்தி பிரசார சபாவில் சேர்ந்தனர். இந்தியை தீவிரமாக கற்று தற்போது ப்ராத்மிக் தேர்வை எழுதி முடித்துள்ளனர்.
இதுகுறித்து மவுரோ(63) கூறியதாவது: இந்தியாவில் பல மதங்கள் மற்றும் பழங்கால நூல்களை படித்ததால், இந்தியா மீது எங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். இந்திய குடியுரிமை பெறவும் விரும்புகிறோம். நாங்கள் விரும்பிய நாட்டில் கட்டியுள்ள ‘பரதேஷ் இன்’ என்ற விடுதிதான் எங்கள் சொர்க்கம்.
பகவான் கிருஷ்ணனின் பக்தர்களாகிய நாங்கள் இந்திய பாரம்பரியம், மக்கள், உணவு உட்பட அனைத்தையும் நேசிக்கிறோம். விடுமுறைக்கு இத்தாலி சென்றால் கூட, விரைவில் திரும்பவே விரும்புவோம். எனது மனைவி மரினா (62) சாதம், சட்னி ஆகியவற்றை நன்றாக சமைப்பார். இவ்வாறு மவுரோ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT