Last Updated : 16 Feb, 2023 09:05 AM

2  

Published : 16 Feb 2023 09:05 AM
Last Updated : 16 Feb 2023 09:05 AM

அம்பேத்கரை அவமதிப்பதை ஏற்க முடியாது: நாடக விவகாரத்தில் கர்நாடக சட்ட அமைச்சர் எச்சரிக்கை

பெங்களூரு: பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொள்வதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக சட்ட அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.

பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரத்தில் மாணவர்கள் அரங்கேற்றிய நாடகத்தில் பாபாசாகேப் அம்பேத்கரையும் பட்டியலின ம‌க்களும் அவமதிக்கப்பட்டனர். இந்த நாடகத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பை, மைசூரு, குல்பர்கா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஜெயின் பல்கலைக் கழகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தலித் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெங்களூரு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் ஜெயின் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கடந்த இரு தினங்களாக ஜெயின் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள‌து. இதனிடையே கர்நாடக சமூக நலத்துறை துணை இயக்குநர் மதுசுதனா அளித்த புகாரின்பேரில், ஜெயின் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர், ஜெயின் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வர் முனைவர் தினேஷ் நில்காமத், பல்கலைக்கழக நிர்வாகி முனைவர் சுனில் குமார் ஆகிய 9 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 5 பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 253ஏ,149,295ஏ ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 9 பேரும் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே ஜெயின் பல்கலைக்கழகம், ''சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரையும், பட்டியலின மக்களையும் அவமதிக்கும் வகையில் நாடகம் அரங்கேற்றியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்''என மன்னிப்பு கோரியுள்ளது. இந்நிலையில் ஜெயின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கர்நாடக சட்ட அமைச்சர் மாதுசாமியை சந்தித்து கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துவிட்டது. எனவே தங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்த‌தாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து அமைச்சர் மாதுசாமி கூறுகையில், ''பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிக்கும் செயலை பாஜக அரசு ஒருபோதும் ஏற்காது. நிர்வாகத்தின் விளக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை. எனவே அவர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லை. அதேவேளையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் நடந்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x