Published : 16 Feb 2023 05:10 AM
Last Updated : 16 Feb 2023 05:10 AM
பெங்களூரு: பெங்களூரு எலகங்கா விமானப் படைத் தளத்தில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியில் ரஷ்யா சார்பில் 200 வகையான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரஷ்ய ராணுவ சேவை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பின் இயக்குநர் திமித்ரி சுகாயேவ், ரஷ்ய அரசு ஊடகமான டாஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்யும் நாடுகளில் ரஷ்யா முன்னணியில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.10.75 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளோம்.
ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கக் கூடாது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவை நிர்பந்தம் செய்து வருகின்றன. எனினும் ரஷ்யா, இந்தியா இடையிலான வர்த்தக, பாதுகாப்பு உறவு வலுவடைந்து வருகிறது.
சுகோய் எஸ்.யு.30 போர் விமானம், மிக் 29 போர் விமானம், எம்ஐ17, எம்.ஐ-24, எம்.ஐ-35, கே.ஏ.-28, கே.ஏ.-31 ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம். எஸ்-400 ரக ஏவுகணைகள், பெச்சோரா -2M ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளோம். தரையில் இருந்து வான்வெளி இலக்கை தாக்கும் பான்ட்சர் ஏவுகணைகள், வீரர்களின் தோளில் வைத்து செலுத்தும் ஸ்டிரிலா -2எம் ரக ஏவுகணைகள், ஆர்லான்-10 ரகத்தை சேர்ந்த ட்ரோன்களையும் இந்தியாவுக்கு அளித்துள்ளோம்.
இவ்வாறு திமித்ரி சுகாயேவ் தெரிவித்தார்.
ரஷ்யாவின் முன்னணி ஊடக மான ஆர்.டி. வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இப்போதைய நிலையில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படையில் பெரும் பாலும் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களே பயன்பாட்டில் உள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் குவாட் கூட்டமைப்பு கூட்டம் இந்த ஆண்டு மத்தியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்துப் பேச உள்ளனர். செப்டம்பரில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின்போதும் இருவரும் சந்தித்துப் பேசுவார்கள்.
அதற்கு முன்பாக வரும் மே மாதம் கோவாவில் நடைபெறும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப் பின் மாநாட்டில் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்துச் பேச உள்ளனர். அப்போது இருதரப்பு வர்த்தக, பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படும். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT