Published : 15 Feb 2023 05:06 PM
Last Updated : 15 Feb 2023 05:06 PM

ராணுவ கொள்முதல் செலவில் 75% உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்தே வாங்கப்படும்: ராஜ்நாத் சிங்

பெங்களூரு: ராணுவ கொள்முதல் செலவில் 75% உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்தே வாங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் விண்வெளி கண்காட்சி 2023-ல் இன்று பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பல்வேறு நாடுகள், இந்திய தயாரிப்புகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ''பாதுகாப்புக்கான சர்வதேச நிறுவனங்களுக்கு இணையாக இந்திய பாதுகாப்புத் துறை முன்னேறி வருவதை விண்வெளி கண்காட்சி பறைசாற்றுகிறது. இந்தக் கண்காட்சியில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை ஒப்பந்தங்களும், தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு புதிய துவக்கத்தை அளித்துள்ளன.

இந்த தருணத்தில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த நிதி ஆண்டு முதல் ராணுவத்திற்காக மேற்கொள்ளப்படும் கொள்முதல் செலவில் 75% உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்தே வாங்கப்படும். அதாவது, ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இந்த கொள்முதல் இருக்கும். உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துவதாக இது இருக்கும்'' என தெரிவித்தார்.

இதையடுத்து நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், ''அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடக வேண்டும் என்பதும்தான் இந்தியாவின் இலக்கு.

பழைய தொழில்நுட்பங்கள் மற்றும் பழைய அணுகுமுறைகளுடன் முன்னேற முயன்றால் அது எதிர்பாத்த வெற்றியைத் தராது. அவ்வாறு முயலும்போது வளர்ந்த நாடுகளைவிட இரண்டு நூற்றாண்டுகள் பின்தங்கியே இருப்போம். எனவே, போட்டிக்கான வரையரையை மாற்றி அமைக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளின் துணையுடன் வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x