Published : 15 Feb 2023 03:16 PM
Last Updated : 15 Feb 2023 03:16 PM

அதானி விவகாரம் | காங். மூத்த தலைவரின் பொதுநல மனு மீது பிப்.17-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: அதானி குழுமத்தின் நிதி முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தக்கூர் தொடர்ந்த பொதுநல மனு வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ ஆகியவை அதிக அளவில் முதலீடு செய்துள்ளதால் அவை பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பங்குச் சந்தை நிதி கண்காணிப்பு அமைப்பான செபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்குமானால், செபியின் கருத்து என்னவாக இருக்கும் என்று அதில் கேட்கப்பட்டது. அதற்கு, உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை அமைப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என பதில் அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் ஜெயா தாக்கூர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது பொதுநல மனுவில், ஒரு பங்கின் விலை ரூ.3,200 என்பதாக அதானி குழும பங்குகளை எல்ஐசி மற்றும் எஸ்பிஐ ஆகியவை வாங்கி உள்ளதாகவும், ஆனால், அந்த பங்குகள் இரண்டாம் நிலை வர்த்தகத்தில் ரூ.1,800க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயா தாக்கூர் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு வழக்குகள் இருப்பதால், அதோடு சேர்த்து இந்த வழக்கும் வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பெர்க் நிறுவன அறிக்கையை அடுத்து அதானி குழுமத்திற்கு 100 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x