Published : 15 Feb 2023 09:12 AM
Last Updated : 15 Feb 2023 09:12 AM
புதுடெல்லி: தங்களது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து, திருமணத்துக்காக வைத்திருந்த தொகையை 20 ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவுக்கு குடிமைப் பணி அதிகாரிகள் அளித்துள்ளனர்.
டெல்லியில் குடிமைப் பணிதேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் இருப்பவர் ஷிவம் தியாகி. இவர் டெல்லியைச் சேர்ந்தவர். அவர் இந்திய தபால் துறையில் சூப்பிரடெண்டாக இருக்கும் ஆர்யா ஆர். நாயரை காதலித்து வந்தார். இருவருமே குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
இவர்கள் அண்மையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் திருமணத்துக்காக ஆடம்பரமாக செலவழிக்க அவர்கள் விரும்பவில்லை. எனவே மிகவும் எளிய முறையில் மணமகள் ஆர்யாநாயரின் சொந்த ஊரான கேரள மாநிலத்தில் திருமணம் நடைபெற்றது. மேலும், திருமணத்துக்காக வைத்திருந்த தொகையை 20 ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு அளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளனர்.
இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுகளை ஷிவம் தியாகியும், ஆர்யா நாயரும் பெற்று வருகின்றனர்.
கோட்டயம் மாவட்டம் வழூரில் அமைந்துள்ள புண்யம் என்ற குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த 20 குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. திருமணமானது பாம்படியிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மணமகள் ஆர்யாநாயர் கூறும்போது, “கேரளாவில் திருமணங்கள் விமரிசையாக 2 அல்லது 3 நாட்களுக்கு நடக்கும். என்னுடைய பெற்றோர், உறவினர், நண்பர்கள் உள்ளிட்டோர் எனது திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக திருமணத்தை எளிமையாக நடத்தினோம்” என்றார்.
ஷிவம் தியாகி கூறும்போது, “2020-ல் நான் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தற்போது திருமணத்தையொட்டி 20 குழந்தைகளுக்கு உதவி செய்தோம். வரும் ஆண்டுகளிலும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக உதவப் போகிறோம்” என்றார்.
ஷிவம் தியாகி தற்போது வருவாய்த்துறை (ஐஆர்எஸ்) பணிக்காக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்பயிற்சி பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT