Published : 15 Feb 2023 07:16 AM
Last Updated : 15 Feb 2023 07:16 AM
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ‘கிப்ட் சிட்டி’ வளாகம், நாட்டிலேயே முதல்முதலாக அதிநவீன வசதிகளுடன் குஜராத்தின் காந்தி நகரில் சபர்மதி ஆற்றின் கரையோரத்தில் உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக கடந்த 2006-07-ல் மோடி இருந்தபோது உருவாக்கப்பட்ட கனவு நகர திட்டம் இது. சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள திறன்மிகு நகரங்கள்போல, ரூ.76 ஆயிரம் கோடியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக ஒரு நகரத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது. குஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே உள்ள காந்தி நகரில் சபர்மதி ஆற்றின் கரைப் பகுதி இதற்காக தேர்வு செய்யப்பட்டது.
2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலை, இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதா, வேண்டாமா என்று 3 ஆண்டுகள் யோசித்த குஜராத் அரசு, 2011 ஜூனில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தது. குஜராத் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், ‘கிப்ட் சிட்டி’ நிறுவனம் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக இந்த நிறுவனத்துக்கு, பயன்பாடற்று இருந்த 1,000 ஏக்கர் நிலம் அரசால் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ‘குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம்’ - கிப்ட் சிட்டி திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, தரமான சாலை, தெரு விளக்குகள், கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை என பல்வேறு வசதிகளுடன் உருவாகி வருகிறது. தற்போது, இங்கு 40 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளன.
நாட்டிலேயே முதல்முதலாக, சர்வதேச நிதி சேவைகள் மையம் (ஐஎப்சிஏ) இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கிப்ட் சிட்டியில் வணிக பயன்பாட்டுக்கு 67 சதவீதம், குடியிருப்புகளுக்கு 22 சதவீதம், பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட சமூகம் சார்ந்த கட்டமைப்புகளுக்காக 11 சதவீதம் என நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
தற்போது, குடியிருப்புகள் இல்லாவிட்டாலும், வணிகரீதியான கட்டிடங்கள் அதிகம் உருவாகியுள்ளன. குறிப்பாக, உள்நாடு முதல் சர்வதேச அளவிலான நிதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இங்கு தங்கள் அலுவலகங்களை அமைத்துள்ளன. காப்பீடு நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கிகளின் அலுவலகங்களும் உள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு பணிக்கு வந்து செல்கின்றனர்.
தானியங்கி கழிவு சேகரிப்பு: கிப்ட் சிட்டியில் எங்கும் குப்பையையோ, குப்பை அள்ளிச் செல்லும் வாகனங்களையோ காணமுடியாது; காரணம் இங்கு உள்ள பிரத்யேக ‘தானியங்கி கழிவு சேகரிப்பு மையம்’. துபாய் நிறுவனத்தின் வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்டிடத்திலும் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியே போட, பிரத்யேகமாக குழாய் உள்ளது. அதில் குப்பையை போட்ட உடனே, குழாய் மூடிக்கொள்ளும். குழாயில் குப்பை விழுந்துள்ள தகவல், மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வரும். உடனடியாக அங்கு உள்ள இயந்திரம் செயல்பட்டு, குப்பையை 90 கி.மீ. வேகத்தில் இழுத்து மையத்துக்கு கொண்டு வந்துவிடும். அங்கு வந்ததும், மக்கும் குப்பையை உரமாக மாற்றும் பணி தொடங்கும். அந்த உரம், கிப்ட் சிட்டியில் உள்ள மரம், செடிகளுக்கு பயன்படுத்தப்படும். மக்காத குப்பை, மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
இந்த சிட்டி முழுவதும், குடிப்பதற்கும், இதர பயன்பாடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வழங்கப்படுகிறது..
கிப்ட் சிட்டியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் சுத்திகரிக்கப்படுகிறது. இதில் ஒரு பகுதி நீர், அங்குள்ள மரம், செடிகளுக்கும், எஞ்சிய பகுதி நீர், கட்டிடங்களில் குளிர்சாதன வசதிக்கான குளிர்நீர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஒரு சொட்டு நீர்கூட வீணாக்கப்படுவது இல்லை. கிப்ட் சிட்டியில் இருந்து வெளியேற்றப்படுவதும் இல்லை.
பிரத்யேக சுரங்கம்: கிப்ட் சிட்டியில், சாலை ஓரமாக பிரத்யேக சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு குளிர்ந்த நீர் செல்லும் குழாய், குடிநீர் குழாய், தீயணைப்புக்கான தண்ணீர் கொண்டு செல்லும் குழாய், திடக்கழிவு மேலாண்மைக்கான உறிஞ்சும் குழாய்கள், இணையதள இணைப்புக்கான ஃபைபர் ஆப்டிகல் கேபிள் என அனைத்தும் இந்த சுரங்கத்தின் வழியாக செல்கின்றன. மின் கேபிள்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதையில் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பழுது ஏற்பட்டுள்ள இடத்தை விரைவாக கண்டறிந்து சீரமைக்க முடிகிறது. சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்காமல் வெளியே செல்ல பிரத்யேக பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வேறு எங்கும் இல்லை என்று கிப்ட் சிட்டியின் மக்கள் தொடர்பு பொது மேலாளர் நிஸ்ரக் ஆச்சார்யா தெரிவித்தார். கிப்ட் சிட்டியின் இந்த அதிநவீன திட்டங்களை பிற மாநிலங்களின் அதிகாரிகள் வந்து பார்த்து, இதுபோல செயல்படுத்த முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது 1,000 ஏக்கரில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை 3,300 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய குஜராத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கிப்ட் சிட்டிக்கு தற்போது தினமும் 650 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் இந்த நிறுவனம் செய்துள்ளது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் இதுபோன்ற திறன்மிகு நகரம் அமைந்திருப்பது தாமதம் என்றாலும்கூட, குஜராத் அரசுக்கும், மக்களுக்கும் இந்த கிப்ட் சிட்டி பெருமை தரக்கூடிய ஒன்று என்பது மிகையல்ல.
விரைவில் சூரியஒளி மின்சாரம்: கிப்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனத்தால் மாநில அரசின் அனுமதியுடன், கிப்ட் சிட்டிக்கென பிரத்யேக மின் விநியோக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வெளி அமைப்புகளிடம் இருந்து மின்சாரத்தை பிரத்யேக தொடரமைப்பு மூலம் பெற்று, விநியோகம் செய்யப்படுகிறது. ஒரே கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.4.65 வசூலிக்கப்படுகிறது. தேவைப்படும் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் பெறுவதற்கான வசதியும் விரைவில் செய்யப்பட உள்ளது,
சபர்மதி நீரில் இருந்து ‘ஏ.சி.’: ஸ்வீடன் நாட்டு நிறுவனத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்த ‘மாவட்ட குளிரூட்டும் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அருகில் உள்ள சபர்மதி ஆற்று நீர் மற்றும், சுத்திகரிப்பு நீர் ஆகியவை ஒரே இந்த குளிரூட்டும் மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு அந்த நீர் குளிரூட்டும் இயந்திரம் மூலம் குளிர்ந்த நீராக மாற்றப்பட்டு, சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம், ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அனுப்பப்படுகிறது. கட்டிடங்களில் உள்ள பிரத்யேக ‘இண்டோர் யூனிட்’ மூலம், அறைகளுக்கு குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பெருமளவு மின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் அளவுக்கான குளிரூட்டல் ரூ.8-ல்
முடிந்துவிடும். இயக்கத்துக்கான செலவுகள் 40% மிச்சப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT