Published : 15 Feb 2023 04:55 AM
Last Updated : 15 Feb 2023 04:55 AM
புதுடெல்லி: குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை பிபிசி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள அதன் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.
கடந்த 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த படத்தை யூ-டியூப்,ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதித்து மத்தியஅரசு கடந்த ஜன.21-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், மோடி எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. இதற்கிடையே, இப்படத்தை இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் திரையிட தடை கோரிய மனுவைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செல்போன், லேப்டாப் பறிமுதல்: இந்நிலையில், பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்றுசோதனை நடத்தினர். முதலில், அங்கு இருந்த பிபிசி செய்தியாளர்கள், ஊழியர்களின் செல்போன், லேப்டாப்களை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர்.
கணக்கு வழக்குகளில் முறைகேடு, வரி ஏய்ப்பு குறித்து புகார் எழுந்தது தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2012 முதலான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனை இன்றும் நீடிக்கும் என கூறப்படுகிறது.
அதேநேரம், ‘இது சோதனை அல்ல.கணக்கு வழக்குகளை ஆய்வு மட்டுமே செய்துவருகிறோம்’ என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சோதனை குறித்து பிபிசிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அதேநேரம், பிபிசியின் இயக்குநர்களின் வீடுகள் உள்ளிட்ட இதர இடங்களில்எந்த சோதனையும் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து பிபிசி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
தலைவர்கள் கண்டனம்: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சமூக வலைத்தள பதிவில், ‘சமீபகாலமாக, அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள், அரசியல் கருவிகளாக அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்க அளவுகடந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகளின் பட்டியலில் பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையும் இணைந்துள்ளது. நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் தேர்தல்களில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ‘‘அதானி குழுமம் மீதான புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால், மத்திய அரசோ பிபிசி அலுவலகத்தில் சோதனை நடத்துகிறது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் கூறியபோது, “குஜராத் கலவரம் குறித்துஆவணப் படம் வெளியிட்டதால் விரக்தியடைந்த நரேந்திர மோடி அரசு, பிபிசி அலுவலகத்தில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது” என்றார்.
ஊழல் மலிந்த நிறுவனம்: பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறும்போது, ‘‘உலகிலேயே மிகவும் ஊழல் மலிந்த நிறுவனம் பிபிசி. இந்த நிறுவனத்தின் பிரச்சாரமும் காங்கிரஸ் கட்சியின் திட்டமும் ஒன்றுதான். அரசு அமைப்பு தன் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை ஆய்வுசெய்வதை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது. பிபிசிக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் தடை விதித்தார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT