Published : 09 May 2017 11:40 AM
Last Updated : 09 May 2017 11:40 AM
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்படுவது நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கர்ணன் நீதித்துறையையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது குறித்து விவாதித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர்
ஆர்.எஸ்.சூரி ஆகியோர் நீதிபதி சி.எஸ்.கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளதை ஏற்றுக் கொண்டனர்.
நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘நீதிபதி கர்ணனுக்கு இந்த வழக்கில் தண்டனை வழங்கினால், அது நீதித்துறை வரலாற்றில் கறையை ஏற்படுத்திவிடும். எனவே, அவர் ஓய்வுபெறும் வரை பொறுத்திருந்து பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைமுறையை தொடர வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி கேஹர், ‘‘நீதிமன்ற அமவதிப்பை பொறுத்தமட்டில், எந்த பாகுபாடும் பார்க்க முடியாது. நிறத்தின் அடிப்படையிலும், நீதிபதியாக இருப்பவர், நீதிபதியாக இல்லாதவர் என்ற எந்த பாகுபாடும் காட்ட முடியாது. அவர் நீதிபதியாக இருப்பதால், தண்டிக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தால், அது தவறு’’ என்றார். ‘‘அவரை இந்த நீதிமன்றம் நீதிபதியாக பார்க்கவில்லை. ஒரு இந்தியக் குடிமகனாக மட்டுமே பார்க்கிறது’’ என்று நீதிபதி பி.சி.கோஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்ததற்காக நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை உடனே அமல்படுத்தும்படி மேற்குவங்க போலீஸ் டிஜிபி-க்கு உத்தரவிட்டனர். நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் வெளியிடக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
சென்னையில் பேட்டி
இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று முன்தினம் இரவே கொல்கத்தாவில் இருந்து கிளம்பி விமானம் மூலம் சென்னை வந்துவிட்டார். அவர் சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கி நேற்று காலை நிருபர்களைச் சந்தித்து பேசினார் (அவர் தெரிவித்த எந்த கருத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வெளியிடப்படவில்லை). நீதிபதி கர்ணன் 1955-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தவர். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62. இதன்படி, நீதிபதி கர்ணன் வரும் ஜூன் 11-ம் தேதி ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை வழங்குவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை. உச்ச நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டால், நீதிபதியாக ஒரு மாதமும், ஓய்வுக்குப் பின்னர் ஐந்து மாதங்களும் அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT