Published : 14 Feb 2023 07:20 PM
Last Updated : 14 Feb 2023 07:20 PM
புதுடெல்லி: பிபிசி செய்தி நிறுவனம் பரிமாற்ற விலை விதிகளை மீறியுள்ளதாக வருமானவரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று (செவ்வாய்கிழமை) அதிரடியாக கணக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது சோதனை அல்ல என்றும், கணக்கு ஆய்வு என்றும் தெரிவித்துள்ளனர். தாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், பரிமாற்ற விலை விதிகளை பிபிசி மீறி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பிபிசி தங்கள் வருமானத்தை மடைமாற்றுவது நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், இது குறித்து வருமானவரித் துறை பலமுறை அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பிபிசி தொடர்ந்து இந்த விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்தச் சோதனை குறித்து கருத்து தெரிவித்த பிபிசி, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள தங்கள் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், தாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், சோதனை விரைவில் முடிவடையும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அரசு, இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்தும் சோதனை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்தனர்.
இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முறைகேடுகள் நடப்பதாகத் தெரிய வந்தால், அதன் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமானதுதான் என்று கூறியுள்ளார்.
பிபிசி அலுவலகங்களிடம் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படங்களை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், வினாச காலே விபரீத புத்தி என்பதற்கு இணங்க மத்திய அரசின் செயல் உள்ளதாக விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT