Published : 14 Feb 2023 04:14 PM
Last Updated : 14 Feb 2023 04:14 PM
புதுடெல்லி: வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்சிரி விமான நிலையத்தில் வேண்டுமென்றே ராகுல் காந்தியின் விமானம் தரையிரங்க அனுமதி மறுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், "கேரள மாநிலம் வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, திரும்பும் வழியில் வாரணாசி வந்து அங்கிருந்து பிரயாக்ராஜ் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அரசின் அழுத்தம் காரணமாக அவரது விமானம் வாரணாசியில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். போக்குவரத்து நெரிசலையும், குடியரசுத் தலைவரின் வருகையையும் சாக்காக சொல்லி வேண்டுமென்றே அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.
ராகுல் காந்தியை கண்டு பாஜக அரசு பயப்படுகிறது. அவர் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கியதில் இருந்தே பிரதமர் மோடி கவலையில் இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டை விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். வாரணாசி விமான நிலைய இயக்குநர் ஆர்யமா சன்யால் கூறுகையில், "பிப்.13-ம் தேதி (ராகுல் பயணிப்பதாக இருந்த நாள்) மாலைப் பொழுதில், ராகுல் காந்தியின் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த விமான நிறுவனத்திடமிருந்து, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்தது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு வாரணாசி வருவாதகவும், அங்கு வரும் அவர் காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்ய இருப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திங்கள்கிழமை மாலை வாரணாசி வந்து, காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கங்கா ஆர்த்தியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT