Published : 14 Feb 2023 01:55 PM
Last Updated : 14 Feb 2023 01:55 PM
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி, எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு அளித்த பதில்: ஆறுகளைச் சுத்தப்படுத்துவது மற்றும் புனரமைப்பது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சாக்கடை நீரை சுத்திகரித்து, அதன்பிறகு ஆறுகள் மற்றும் கடலில் கலக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்தது.
ஆறுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மாசு கலப்பதை தடுக்கும் வகையில் மத்திய அரசின் நிதி உதவியோடு தேசிய ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாசு கலந்த ஆற்றுப் பகுதிகளை ஒட்டிய நகரங்களில் கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டங்களுக்கு தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்ட நிதி கோரி மாநிலங்களால் அனுப்பப்படுகிறது. வரிசைப்படி அவை பரிசீலிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி, அடையாறு, கூவம், வைகை, வெண்ணாறு, மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறு ஆறுகளை மாசுபடுவதிலிருந்து பாதுகாக்க 908 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் சென்னை, ஈரோடு, பவானி, கரூர், கும்பகோணம், மதுரை, மயிலாடுதுறை, பள்ளிபாளையம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு 477 மில்லியன் லிட்டர் பயன்படுத்தத் தக்க நீர் பெறப்படுகிறது. ஆனால் ஜல் சக்தி அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு இதற்கென எந்த நிதியும் கடந்த ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்படவில்லை.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம், பழுதுபார்த்தல், புதுப்பித்தல், மீட்டெடுத்தல் என்கிற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. பிரதமரின் பிரத்யேகத் திட்டத்துடன் இத்திட்டம் இணைக்கப்பட்டு, நீர்நிலைகளின் தரத்தை உயர்த்துவது, ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது, நிலத்தடி நீர் மட்டத்தை உயரச் செய்வது, குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கான நீரின் அளவை பெருக்குவது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அதிகப்படுத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்போடு ஒரு திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
ஏரி முகப்பு பகுதிகளை அழகுபடுத்துவது, கழிவுநீரை சுத்திகரிப்பது, கழிவுநீர்ப் பாதைகளை மாற்றி அமைப்பது, மழைநீர் வடிகால் அமைப்பது, ஏரியை அழகுபடுத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் பள்ளிக்கரணை உள்ளிட்ட மூன்று சதுப்பு நிலப்பகுதிகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசு 2017 முதல் 2022 வரையிலான ஐந்தாண்டுகளில் 3.6 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது.
சதுப்பு நிலப் பாதுகாப்புக்கென ஒன்றிய அளவில் தேசிய சதுப்புநிலக் குழுவும்; மாநில அளவில் சதுப்புநில ஆணையமும் அமைக்கப்பட்டு, சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்பு மற்றும் மாசடைவதிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக சதுப்புநிலப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவது, கழிவுநீரைக் கலப்பது, வணிகப்பகுதிகளை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன.
பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை எல்லா வகையிலும் பாதுகாக்கும் வகையில் அப்பகுதியை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலப் பகுதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...