Published : 14 Feb 2023 01:16 PM
Last Updated : 14 Feb 2023 01:16 PM

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும்: நட்பு நாடுகளுக்கு இந்தியா அழைப்பு

பெங்களூரு: பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ''உதவி தேவைப்படும் நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதிலோ வெளிப்படையற்ற தீர்வுகளை வழங்குவதிலோ இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து நாடுகளையும் நாங்கள் சமமான பங்குதாரராகவே பார்க்கிறோம். எனவேதான் வெளியே இருந்து கொண்டு உத்தரவுகளை இடுவதிலோ, உயர்வு மனப்பான்மையுடன் தீர்வுகளை வழங்குவதிலோ நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

வளர்ந்த நாடு என்பதற்காகவோ, ராணுவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடு என்பதற்காகவோ ஒரு நாடு பிற நாட்டிற்கு அதிகார தோரணையில் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. மேலே இருந்துகொண்டு கீழே இருப்பவர்களுக்கு உத்தரவிடும் அணுகுமுறை பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை தராது. கீழே இறங்கி வந்து தோளோடு தோள் நின்று வழங்கப்படும் தீர்வுகள்தான் நீடித்து நிலைத்ததாக இருக்கும். உதவி என்பது நிறுவனங்களை கட்டமைப்பதாக, இணக்கமான முறையில் செயல்படுவதாக இருக்க வேண்டும்.

இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு இத்தகைய பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கவே விரும்புகிறது. நாங்கள் உங்களோடு இணைந்து இருப்போம்; இணைந்து தொடங்குவோம்; இணைந்து உருவாக்குவோம்; இணைந்து வளர்ச்சியை உருவாக்குவோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மதிப்புமிக்கதாக இருப்பது அவசியம். ஒரு நாடு மற்ற நாட்டிடம் இருந்து கற்க வேண்டும்; இணைந்து வளர வேண்டும். இதுதான் இரு தரப்புக்கும் வெற்றியைத் தரக்கூடிய வழிமுறை'' என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x