Published : 14 Feb 2023 09:51 AM
Last Updated : 14 Feb 2023 09:51 AM

வழக்கு காரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் முடங்கி இருந்த 118 திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: வழக்கு காரணமாக 5 ஆண்டு களுக்கு மேல் முடங்கி இருந்த 118 திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சாலைகள், பள்ளிகள், அரசு அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது சுற்றுச் சூழல் பாதிக்கும் என்று வழக்கு தொடுக்கப்படுகிறது. அதுபோல் வழக்கு காரணமாக 5 ஆண்டு களுக்கு மேல் முடங்கி இருந்த 118 திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத் தின் பசுமை அமர்வு கடந்த வாரம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய பசுமை அமர்வு பிறப்பித்த உத்தரவில், “வளர்ச்சி திட்டங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. வருங்கால தலைமுறையினருக்காக சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேநேரம், வளர்ச்சி திட்டங்களை தடுக்கவும் கூடாது. இவை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் குடிமக்களின் பாதுகாப்புக்கும் அவசியம்” என்றனர்.

நீடித்த வளர்ச்சி அவசியம் என்ற கொள்கையின் அடிப்படை யில் உச்ச நீதிமன்றம் 118 திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.அத்துடன், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் கே.பரமேஸ்வர் மற்றும் ஏடிஎன் ராவ் ஆகியோரின் ஒத்துழைப்பும் இந்த வழக்குகள் முடிய முக்கிய காரணமாக அமைந்தது. இதில் 15 திட்டங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தன. இவ்வாறு திட்டங்கள் காலதாமதம் ஆவதால், அவற்றின் திட்ட மதிப்பீடும் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளுக்கு முன்பு தடை

இதில் ஒரு முக்கியமான வழக்கு என்னவென்றால், இமாச்சல பிரதேசத்தில் எந்த ஒரு திட்டத்துக்கும் வனப்பகுதி நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. இந்நிலையில், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி இமாச்சல பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தது. ஆனால் பசுமை அமர்வு தொடர்ச்சியாக வழக்குகளை விசாரிக்காததால் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய பசுமை அமர்வு நியமிக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை தீவிரமடைந்து தீர்ப்பு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x