Published : 14 Feb 2023 09:35 AM
Last Updated : 14 Feb 2023 09:35 AM
புதுடெல்லி: துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தோருக்கு உதவவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் இந்தியாவின் சார்பில் மீட்புக் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். மேலும் ஏராளமான நிவாரணப் பொருட்களும் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 23 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள்அடங்கிய 7-வது இந்திய விமானம்துருக்கியை நேற்று சென்றடைந்துள்ளது.
இதற்காக இந்தியாவுக்கு துருக்கியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் இந்திய மக்களிடமிருந்து மேலும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் துருக்கிக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு கூடாரமும், ஒவ்வொரு போர்வையும், ஒவ்வொரு தூங்கும் வசதிகொண்ட கருவிகளும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன. பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு உதவிய இந்தியாவுக்கு மீண்டும் நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT