Published : 14 Feb 2023 04:37 AM
Last Updated : 14 Feb 2023 04:37 AM
பெங்களூரு: ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சியை பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ‘‘2024-25-ம் ஆண்டுக்குள் நாட்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை 1.5 பில்லியன் டாலரில் இருந்து 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா' சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 14-வது ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சியை பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப் படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாக கர்நாடகா மாறியுள்ளது. இங்கு ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெறுவதால் பாதுகாப்பு துறையில் கர்நாடக இளைஞர்களுக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கும்.
குறிப்பாக, புதிய இந்தியாவின்திறமைகளுக்கு சாட்சியாக பெங்களூரு விளங்குகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய திறன்களுக்கு இந்த கண்காட்சி சிறந்த உதாரணம் ஆகும். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பதால், உலகம் இந்தியாவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
இதில், உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் ரூ.750 பில்லியன் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்ற இருக்கின்றன.
இதனால், ‘ஏரோ இந்தியா’ கண்காட்சிக்கு ‘பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' என்பதுகருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
75 நாடுகளுக்கு ஏற்றுமதி: பல தசாப்தங்களாக மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்தது. தற்போது இந்தியா 75 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாகமாறியுள்ளது. பிலிப்பைன்ஸ், மொரிஷியஸ், ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ‘துருவ்’ ஹெலிகாப்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஹெச்ஏஎல் தேஜஸ் இலகு ரக போர் விமானம் மலேசியாவுக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.
வரும் 2024-25-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை 1.5 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் துறையும், முதலீட்டாளர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் தனியார் முதலீடுகளை அதிகம் வரவேற்கிறேன்.
புதிய இந்தியாவில் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுமுடிவுகள் வேகமாக எடுக்கப்படுகின்றன. இந்த சீர்திருத்தங்கள் எளிய முறையில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான வாய்ப்பாக இருப்பதாக ஒட்டுமொத்த உலகமும் கருதுகிறது. இந்தியாவின் வரம்பற்ற திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ஏரோ இந்தியா’ கண்காட்சி அமைந்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட், கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
811 அரங்குகள்: வரும் 17-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் நாட்டின் இலகு ரக தேஜஸ் போர் விமானம் மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த போர் விமானங்களும் பங்கேற்று வானில்சாகசங்கள் புரிந்தன.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 701 இந்திய விமான நிறுவனங்களின் அரங்குகள், 110 வெளிநாட்டு அரங்குகள் என மொத்தம் 811 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT