Published : 13 Feb 2023 08:40 PM
Last Updated : 13 Feb 2023 08:40 PM
புதுடெல்லி: மக்களவையில் இன்று நேரமில்லா நேரத்தின்போது பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், கடலோரக் காவல் படை கப்பலுக்கு ராணி வேலு நாச்சியார் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து தென் சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது: “சிவகங்கையில் 1730-ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி ராணி வேலுநாச்சியார் பிறந்தார். இவர், உத்வேகத்துடன் கூடிய ஓர் ஆளுமை சின்னம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்த முதல் இந்திய ராணி ஆவார். ராணி வேலு நாச்சியார் 85 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து தனது ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றார்.
அவருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டு அவரது வீரம் மற்றும் சுதந்திரப் போராட்ட உணர்வை இந்திய அரசு கவுரவித்தது. ராணி வேலு நாச்சியாரின் வீரத்தை போற்றும் வகையில் அவரது உருவப்படம் பரவலாக பயணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவரது நிஜ வாழ்க்கைப் போராட்டம் 62 நாடகக் கலைஞர்களின் பங்கேற்போடு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடத்தப்பட்டது.
தற்போது இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள், துணிச்சலான மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. சில கப்பல்களுக்கு ராணி கிட்டூர் சென்னம்மா, ராணி லக்ஷ்மி பாய் போன்ற துணிச்சலான பெண்களின் பெயர்சூட்டப்பட்டுள்ளன. ஆனால், ராணி வேலு நாச்சியாரின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை.
எனவே, ராணி வேலு நாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பெயரை கடலோர காவல் படையின் விரைவு ரோந்து கப்பலுக்கு சூட்ட மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT