Published : 13 Feb 2023 07:39 PM
Last Updated : 13 Feb 2023 07:39 PM
வயநாடு: “நாட்டின் பிரதமர் என்பதால் மக்கள் தன்னைப் பார்த்து அச்சம் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார்” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, ''நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டன. நான் யாரையும் அவமதிக்கவில்லை. ஆனாலும், நான் கூறியதற்கு ஆதாரம் காட்டுமாறு பாஜகவினர் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, எனது உரையில் நீக்கப்பட்ட பகுதிகளுக்கும் சேர்த்து அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து மக்களவை சபாநாயகருக்கு ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளேன்.
பிரதமர் என்பதால் தான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும், மக்கள் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடி நினைக்கிறார். அவர் உண்மையை உணரவில்லை. அதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர் பிரதராக இருப்பது ஒரு விஷயமே இல்லை. ஏனெனில், உண்மையை ஒருநாள் அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கவனிப்பதும் புரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம். அப்போதுதான், பிரதமருக்கும் அதானிக்கும் இடையே இருக்கும் தொடர்பை புரிந்துகொள்ள முடியும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT