Published : 13 Feb 2023 04:31 PM
Last Updated : 13 Feb 2023 04:31 PM
திருவனந்தபுரம்: “அனைத்து மதத்தவர்களும், மத நம்பிக்கை அற்றவர்களும் அமைதியாக வாழும் மாநிலம் கேரளா” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவின் புத்தூர் நகருக்கு நேற்று முன்தினம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, “கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் அது பாஜகவால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 1,700 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, அந்த அமைப்பையே நிரந்தரமாக தடை செய்துவிட்டார். தேச விரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சி காங்கிரஸ். அவர்களால் ஒருபோதும் கர்நாடகாவிற்கு பாதுகாப்பு கிடைக்காது” என்று கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது என்றும் கர்நாடகாவை பாஜகவால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்றும் அமித் ஷா கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார். அண்டை மாநிலமாக கேரளா இருப்பதால் என்ன தவறு?
கேரளாவில் அனைத்து மத மக்களும், மத நம்பிக்கை அற்ற மக்களும் அமைதியாக வாழ முடியும். ஆனால், கர்நாடகா என்ன நிலைமையில் இருக்கிறது? மதக் கலவரங்கள் நிகழும் மாநிலமாக அது உள்ளது. சிக்மகலூருவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்ச் கடந்த 2021-ம் ஆண்டு சங் பரிவார் அமைப்பால் தாக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள சிறுபான்மை மக்கள் சங் பரிவார் அமைப்பினரால் தாக்கப்படுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவதால், கேரளாவில் யாருக்கும் எந்த தீங்கும் நேருவதில்லை. இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். கேரளாவைப் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT